முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமன் ஜெயந்தி: சுசீந்திரத்தில் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

 

நாகர்கோவில் - ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று காலை ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

 

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு நேற்று காலை பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடந்தன.

 

முன்னதாக அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீராமருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திருநீர், எழுமிச்சை சாறு, மாதுளை சாறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 25 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் பகல் 12 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்காக ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் லட்டு விநியோகம் தொடங்கியது. ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்ட் சார்பில் காலை 10 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோயில் கலையரங்கம் மற்றும் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளி வளாகம், துவாரகா கிருஷ்ணன் கோவில் வளாகம் என 3 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலையில் தொடங்கிய அன்னதானம் இரவு வரை நீடித்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இது தவிர வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஆஞ்சநேயருக்கான அபிஷேகங்களை காண திரண்டிருந்தனர். நேற்று மாலை 6 மணிக்கு ராம ஆஞ்சநேயருக்கு மல்லி, பிச்சி, தாமரை, பச்சிலை, துளசி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.பக்தர்கள் கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து