முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.

அந்த மனுவில் சென்னை பெரம்பூரில், தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை அலுவலகம் நடத்தி வந்த இளவரசன், குருமூர்த்தி (எ) ரேன்டி ஆகியோர் என்னிடமும், எனது நண்பர் தியாகராஜனிடமும் பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இரு தவணையாக தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் என ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். ஆனால் போலி பணி ஆணை கொடுத்து ஏமாற்றிவிட்டு, நாங்கள் கொடுத்த பணத்தையும் தராமல் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறியிருந்தார்.

புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த இளவரசன், குருமூர்த்தி ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட இளவரசன் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்திருப்பதும், குருமூர்த்தி பி.டெக் படித்திருப்பதும் தெரியவந்தது.

இளவரசன் 2008-ம் ஆண்டு பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். அந்த அனுபவத்தில், சென்னை பெரம்பூரில் தனியார் வேலை வாய்ப்பு ஆலோசனை அலுவலகத்தை திறந்து, வேலையில்லா வாலிபர்களுக்கு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இளவரசனுக்கு, குருமூர்த்தி உறுதுணையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வரவே, இளவரசனும், குருமூர்த்தியும் தாங்கள் நடத்தி வந்த நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகியதும், 2012-ம் ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடியிலும் இளவரசன் முக்கிய குற்றவாளி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இளவரசன், குருமூர்த்தி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து