முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் உடலுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 79 வயதாகிய பாலசுப்ரமணியன் கடந்த வெள்ளிகிழமையன்று இரவு மாரடைப்பினால் காலமானார். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல்  தானமாக அளிக்கப்பட உள்ளது.
அதற்கு முன் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் நேற்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஏ1 டிவோலி அப்பார்ட்மெண்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியில் உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவரின் பூத உடலுக்கு பல்வேறு துறையை சேர்ந்த பிரமுகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். எழுத்தாளர் சுபா, பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன், ஆறாம்திணை சிவராமன், நக்கீரன் கோபால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பங்குச்சந்தை நிபுணர்கள் நாகப்பன் மற்றும் புகழேந்தி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், சூர்யா, சூரி, கிரேசி மோகன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், பிரமிட் நடராஜன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சாமல் சிறை சென்ற பாலசுப்ரமணியன்...
: பத்திரிகை உலகம் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளது. அதில் மறக்க முடியாத ஒன்று, "பாஸ்" எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பு தினம் 1987ம் ஆண்டு ஆனந்த விகடன் அட்டையில் ஒரு அட்டைப் பட கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அது அப்போதைய ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தி விட்டது. சட்டசபையை விமர்சிக்கும் வகையிலான கார்ட்டூன் அது. இதையடுத்து அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன், பாலசுப்ரமணியனுக்கு சம்மன் அனுப்பினார். பாலுவும் சட்டசபைக்கு சென்றார். அங்கு அவரை கூண்டில் ஏற்றினர். மன்னிப்பு கேட்கக் கோரினர். ஆனால் அந்தக் கார்ட்டூனை வரைந்தவரை முன்னிறுத்தி பலிகடாவாக்கி தப்பிக்க முனையாமல் அந்த கார்ட்டூனுக்கு நானே பொறுப்பேற்கிறேன், ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணிச்சலுடன் கூறி விட்டார் பாலு. அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன், பாலுவை 3 மாதம் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பத்திரிகை உலகம் கொந்தளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கோர்ட், பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அதை வாங்க மறுத்து விட்டார் பாண்டியன். மாறாக, நான் சட்டசபையின் சபாநாயகர், கோர்ட்டை விட வானளாவிய அதிகாரம் படைத்தவன் என்று அவர் முழங்கியது அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. கோர்ட், பாலுவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. மேலும், ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் பாலுவுக்கு ஆதரவாக திரண்டதைப் பார்த்த முதல்வர் எம்.ஜி.ஆர். இதில் தலையிட்டார். அவரை 3 நாளிலேயே சிறையிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.  பாலசுப்ரமணியனின் மறைவு.. விகடனுக்கு மட்டுமல்ல.. தைரியமான பத்திரிகையாளர்களுக்கும் கூட பேரிழப்புதான்!

விகடன்' பாலசுப்பிரமணியன், 'இந்து' எம்.சி. சம்பத் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல்

விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், 'இந்து' நாளேட்டின் ஓய்வு பெற்ற சீனியர் அசோசியேட் எடிட்டர் எம்.சி. சம்பத் ஆகியோர் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல் தெரிவித்துள்ளது. ரிப்போர்ட்டர்ஸ் கில்டு தலைவர் ரங்கராஜ், செயலாளர் டி. சேகர் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: விகடன் குழுமத்தின் நவீனத்தைப் புகுத்திய எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர்களின் முன்னோடியாக திகழ்ந்தவர். தமிழக அரசால் அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு முன்னணியில் நின்று போராட்டங்களை நடத்தியது.இதற்காக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு நிர்வாகிகளை தமது படப்பை பண்ணை இல்லத்துக்கு அழைத்து தாமே சமைத்து விருந்து படைத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல் 50 ஆண்டுகாலம் இந்து பத்திரிகையில் சீனியர் அசோசியேட் எடிட்டராக பணியாற்றிய எம்.சி. சம்பத் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறார். இந்து நாளேட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்து செயலாற்றியவர். அவர் கடந்த 20-ந் தேதி மாரடைப்பால் 78 வயதில் காலமானார். அவரது மறைவுக்கும் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து