முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி - தவான் மோதல் சர்ச்சை பொய்யானவை: தோனி

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டத்தின் காலையில் ஷிகர் தவனுக்கும் விராட் கோலிக்கும் தகராறு ஏற்பட்டதாக எழுந்துள்ள செய்திகளை தோனி மறுத்துள்ளார்.
அதாவது, வலைப்பயிற்சியில் தவன், கோலி இருவருமே காயமடைந்தனர், இந்நிலையில் அன்று தவன் தான் களமிறங்க மறுத்ததாகவும் அதன் பிறகு கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கோலி, தவனை நோக்கி சவாலைச் சந்திப்பதிலிருந்து ஓடுகிறாய் என்று கூறியதாகவும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரி இருவரையும் சமாதானம் செய்ததாகவும் செய்திகள் எழுந்தன.
இதனை தோனி பாணியில் மறுத்துக் கூறும் போது, “ஆம்! அதுதான் உண்மை, கத்தியைக் கொண்டு விராட் கோலி, தவனை குத்தினார், அதிலிருந்து அவர் மீண்டவுடன் களத்திற்குள் அவரை தள்ளிவிட்டோம் போங்கள்! இவையெல்லாம் உண்மைக்கு புறம்பான வெறும் கதைகள். மார்வெல்-வார்னர் பிரதர்ஸ் இதனைக் கொண்டு படம் தயாரித்து விடலாம். எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் முளைக்கின்றன என்பது எனக்கு புரிவதில்லை. அணியிலிருந்து யாராவது ஒருவர் இதனை உங்களிடம் கூறியிருந்தால் அவர் பெயரை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் அவரது கற்பனைத்திறன் அபாரம், அவர் உடனடியாக வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார். அந்த நபர் எங்கள் ஓய்வறையில் இருக்க வேண்டிய நபரேயல்ல, ஏனெனில் நடக்காத ஒன்றை அவர் படைக்கிறார் என்றால் அவர் உண்மையில் அபாரத் திறமை கொண்டவர்தானே.
இப்படிப்பட்ட கதைகள் பேப்பர் விற்க பயன்படும். ஆனால் நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. ஓய்வறை சூழல் அற்புதமாக உள்ளது, எந்த ஒரு விவகாரமும் இல்லை. நாங்கள் அயல்நாடுகளில் விளையாடும் போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீடியாக்களிடம் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தோன்றுகின்றன. சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் கதைகளை உருவாக்குகின்றனர். அதனை வெளியிடவும் செய்து விடுகின்றனர்” என்று கூறினார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து