முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: பாக்.,

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ராணுவத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பெஷாவரில் பள்ளியொன்றில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதம் தொடர்பான நிலைப்பாட்டை அந்நாட்டு அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் பயங்கரவாத குற்றங்களை விசாரிப்பதற்கு ராணுவத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது என முடிவாகியது. இந்த நீதிமன்றங்களில் முற்றிலும் ராணுவ அதிகாரிகளே இடம் பெறுவர். இவை விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளும். இந்த ராணுவ நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நவாஸ், பயங்கரவாதிகள் புரியும் கொடிய செயல்களுக்கு இந்த நீதிமன்றங்கள் முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.
ராணுவ சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக  நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குர்ஷித் ஷா கூறினார்.
முன்னதாக தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு தானாக முன்வந்து தடை விதித்திருந்தது பாகிஸ்தான். பெஷாவர் பள்ளி தாக்குதலையடுத்து  இந்த தடையை நீக்கியதுடன் கடந்த ஒரு வாரத்தில் 6 பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். மேலும் 55 பயங்கரவாதிகளின் கருணை மனுக்களை அதிபர் மம்னூன் ஹூசைன் நிராகரித்ததையடுத்து அவர்கள் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என்று தெரிகிறது. பயங்கரவாதம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 500க்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து