முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே தொடரில் 4 சதம் அடித்து கோலி சாதனை

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலிசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பதிவு செய்த நான்காவது சதம் இதுவாகும்.
சிட்னியில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வெற்றி பெற்ற ஆஸி. முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், 2வதாக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனிங்கில் இறங்கிய முரளி விஜய் டக் அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

ராகுல் 110 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டார் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயல, அது கேட்ச் ஆனது. ராகுல் ஆட்டமிழந்த நேரத்தில் இந்தியா 238 ரன்கள் எடுத்திருந்தது. கோலி - ராகுல் இணை பார்ட்னர்ஷிப்பில் 141 ரன்களைக் குவித்தது. மறுமுனையில் அசராமல் ஆடி வந்த கோலி 162 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். கேப்டன் பொறுப்பேற்ற பின் கோலி அடிக்கும் மூன்றாவது சதம் இது. இந்தத் தொடரில் கோலியின் 4-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சன் வீசிய 100-வது ஓவரில் ரஹானே 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரேஷ் ரெய்னா, வந்த வேகத்திலேயே முதல் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய சாஹா கடைசி வரை தனது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கோலி 140 ரன்களுடனும், சாஹா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 230 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 4 சதங்களை அடித்துள்ளார் அத்துடன் ஒரே டெஸ்ட் தொடரில் 689 ரன்கள் எடுத்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பாக சுனில் கவாஸ்கர், 1971 மற்றும் 1978-79ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த போட்டிகளில் இந்த சாதனையை செய்திருந்தார். அதன்பிறகு இப்போது விராட் கோலி அந்த சாதனையை சமன் செய்துள்ளார். அதே நேரம் ஆஸ்திரேலிய மண்ணில் 86 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஒரே டெஸ்ட் தொடரில் 4 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து