முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை குறைந்தாலும் ரெயில் கட்டணம் குறையாது

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - ‘‘டீசல் விலை குறைந்தாலும் ரெயில் கட்டணம் குறையாது’’, என்று சென்னையில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

சென்னையில் நேற்று புதிய ரெயில் சேவை தொடங்கிவைத்த பிறகு மத்திய ரெயில்வே அமைச்சர்  சுரேஷ் பிரபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வேயில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தெற்கு ரெயில்வே மண்டலம் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. சரக்கு கையாளுவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பயணிகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதைவிடவும், பயணிப்பதற்கு சுமுகமான பல்வேறு புது வசதிகள் தொடங்கப்படும். பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, மகளிர் பெட்டிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுவார்கள். மேலும் அவர்களின் பாதுகாப்புக்காக செல்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதேபோல், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன.
 
அலுவலகங்கள் செல்வோர்கள் சரியான நேரத்திற்கு செல்வதற்கு வசதியாக மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் வகையில் சேவை மேம்படுத்தப்படும். ரெயில்களின் சுமுக இயக்கத்திற்காக சிக்னல் தொடர்பான தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்படும்.
 
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக சக்தி படை போலீசார் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அதை நான் வெகுவாக பாராட்டுகிறேன். தெற்கு ரெயில்வேயில் 5 ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் ஓய்வு அறையை பயன்படுத்துவதற்கு ‘ஆன்-லைன்’ மூலமாக முன்பதிவு செய்யலாம். இந்த வசதி மேலும் பல ரெயில் நிலையங்களில் விரிவாக்கம் செய்யப்படும்.
 
ரெயில் பயணத்தின் போது சுகாதாரமான மற்றும் சுத்தமான உணவு வழங்குவதற்காக ‘பேஸ் கிச்சன்’ ஒவ்வொரு கோட்டங்களிலும் அமைக்கப்படும். ரெயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்பான்கள் வைக்கப்படும். இதனால் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிகம் குவிவதை குறைக்க முடியும்.
அரசு சாரா அமைப்புகள், குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தி சுத்தப்படுத்துவது மற்றும் வளர்ச்சிக்கு தானாக முன்வர வேண்டும். ரெயில்வே அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். இதுதொடர்பான கொள்கை விரைவில் வகுக்கப்படும்.
 
மத்திய மாநில அரசுடன் இணைந்து ரெயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவு செய்யப்படும். இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து விட்டன. தமிழ்நாடும் விரைவில் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
6 லட்சம் கோடி முதல் 8 லட்சம் கோடி வரையிலான ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்களை மாநில அரசுடன் இணைந்து விரைவாக செயல்படுத்த மத்திய அரசு விருப்பப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் மொத்தம் 23 ரெயில் நடை மேம்பாலங்கள் கட்டும் பணி நிறைவடைந்து விட்டன. மேலும் 62 புதிய ரெயில் நடை மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த பணிகளும் முடிவடைந்து விடும். பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தாலும், ரெயில்வே துறையில் செலவு அதிகமாக இருக்கிறது. ரெயில் கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை.
 
கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 2 ரெயில் நடைமேடையும், கடற்கரை ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் நடைமேடையும் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன. வருகிற மார்ச் மாதம் முதல் இது செயல்பாட்டிற்கு வரும்.
 
சென்டிரல்-பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது வழித்தடத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை-கன்னியாகுமரி இடையில் இரண்டாவது வழித்தடம் அமைக்கும் பணி மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி விரைவில் நிறைவு செய்யப்படும். ராயபுரம் ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக்கும் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து