முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்டிரல்-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர ரெயில் சேவை

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னை சென்டிரலில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு வாராந்திர புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
 
சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர அதிகவேக விரைவு ரெயில் அறிமுக விழா சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் நடைபெற்றது.
 
விழாவுக்கு, தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.
புதிய ரெயில் சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் விழாவில் பேசியதாவது:-
 
இந்தியாவில் அன்றாடம் 2 கோடியே 75 லட்சம் பயணிகள் ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். எப்படி நீண்ட தூர பயணிகள் ரெயிலுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை மின்சார ரெயிலுக்கு கொடுக்க வேண்டும்.
 
ரெயில்வேக்கு கிடைக்கும் வருவாயில் மூன்றில் 2 பங்கை சரக்குகளை கையாளுவதன் மூலமாக கிடைக்கிறது. எனவே சரக்குகளை கையாளுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருவாய் அதிகமாக கிடைக்கும். அதன்மூலம் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தலாம். தற்போது ரெயில்வே துறை அதிகளவு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
 
பழனி-பொள்ளாச்சி, செங்கல்பட்டு-விழுப்புரம் இடையேயான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும். டீசலை அதிகளவு ரெயில்வே துறை பயன்படுத்துகிறது. அதை குறைக்க வேண்டும் என்று சொன்னால், மின்மயமாக மாற்ற வேண்டும். இதுவரை 50 சதவீதம் அளவிற்கு மின்மயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
தெற்கு ரெயில்வேயில் 14 முக்கியமான ரெயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் ரூ.41 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக மும்பையில் ‘பாதுகாப்பு அலாரம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதே போல் மற்ற கோட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
 
இந்தியா முழுவதும் 11 ஆயிரம் ஆள் இல்லா ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இவை படிப்படியாக குறைக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். ‘ரெயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை திட்டம்’ சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இதேபோல், இந்தியா முழுவதும் ஏற்படுத்துவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ரெயில்வே திட்டங்களை மாநில அரசுடன் இணைந்து சிறப்பு நோக்க வாகன திட்டத்தின் படி செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டத்தில் விரைவில் தமிழ்நாடு இணையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
 
இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே தலைமை பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, ஐ.சி.எப் பொதுமேலாளர் அகர்வால், சென்னை கோட்ட வணிக மேலாளர் காயத்ரி, சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சென்னை சென்டிரல்-காமக்யா இடையே ஏ.சி. பிரீமியம் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
நிகழ்ச்சி வந்திருந்த மத்திய ரெயில்வே அமைச்சர்மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகளை சந்தித்து பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மாற்றுத்திறனாளிகள் யாரையும் சந்திக்காமல் சென்றுவிட்டார். விமானம் காலதாமதமாக புறப்பட்டதாலும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியதாலும் மத்திய அமைச்சர் யாரையும் சந்திக்காமல் சென்றுவிட்டார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதனால் மத்திய அமைச்சரை காண ஆர்வமாக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்-பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு 8.10 மணிக்கு, ‘சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம்’ வாராந்திர அதிவேக விரைவு ரெயில் புறப்பட்டு செல்லும். விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தை அடுத்த நாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ‘விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல்’ வாராந்திர அதிவேக விரைவு ரெயில் புறப்படும். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை அடுத்த நாள்(சனிக்கிழமை) காலை 9.35 மணிக்கு வந்தடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து