முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் வியாழக்கிழமை விஐபி தரிசனம் ரத்து

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 29ஆம்தேதி முதல் வியாழக்கிழமை தோறும் மாலை நேர விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை, வாரவிடுமுறையை முன்னிட்டு ஏழுமலையான தரிசிக்க சென்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். வார இறுதி நாள்களில் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். இந்த நிலையில், பொங்கல் விடுமுறையும் வார இறுதி நாள்களும் இணைந்து வந்த காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மேலும், முன்பதிவு மூலம் ரூ.300 விரைவு தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 20 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் 9 மணி நேரமும் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை, 57,125 பக்தர்களும், சனிக்கிழமை முழுவதும் 78,651 பக்தர்களும் ஏழுமலையானை தரிசித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 28 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 12 காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருந்தனர். திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 26ம்தேதி சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரதசப்தமி உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும் என்பதால், இது ஒருநாள் பிரம்மோற்சவம் மற்றும் மினி பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.

பிரம்மோற்சவத்தின்போது, 9 நாட்கள் நடைபெறும் வாகன சேவை ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். இதையொட்டி அன்றைய தினம் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், வசந்த உற்சவம், ஆர்ஜித உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் விசேஷ பூஜை ஆகியவற்றை தேவஸ்தானம் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 29ம்தேதி முதல் வியாழக்கிழமை தோறும் மாலை நேர விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது என இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து