முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே அறையில் பதுக்கிய ரூ.1500 கோடி மீட்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கை அதிபர் மாளிகையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய்களை  கட்டுக் கட்டாக அதிகாரிகள் கைப்பற்றி மீட்டனர். மேலும் அரசு கருவூலத்திலும் ராஜபக்சே கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில்  நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே  படுதோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ராஜபக்சேவை திட்டமிட்டு தோற்கடித்தன. முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே அவசர நிலையை கொண்டு வந்து ராணுவத்தின் பின்னணியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ராஜபக்சே திட்டம் தீட்டினார்.  ஆனால் அவரது திட்டத்திற்கு ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க  மறுத்து விட்டனர்.
 
இதனால் வேறு வழியின்றி தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து  ராஜபக்சே வெளியேறினார். இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசு அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது அதிபர் மாளிகையில் ராஜபக்சே குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதிபர் மாளிகையில்  ராஜபக்சே ரகசிய அறைகளை கட்டி இருந்ததும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தோல்வி அடைய போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ராஜபக்சே குடும்பத்தினர் பலர் தங்களது சொகுசு  கார்களை வெளிநாட்டிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சூழலில் அதிபர்  மாளிகையில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு ராஜபக்சேவின் ரகசிய அறையில் பதுக்கியிருந்த  ரூ.1500 கோடி ரொக்கப் பணத்தை கட்டுக்கட்டாக மீட்டுள்ளனர். இதில் ஏராளமான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் அடங்கும். அதிகாரிகள் மேலும் நடத்திய சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி  உள்ளன. இலங்கையில் உள்ள கருவூலத்தில் அதிபர் கட்டுப்பாட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி  பணத்தில் வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி  அடைந்தனர்.
 
இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் ரூ.13 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கலாம் என்பது  உறுதியாகியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறையை தன் வசம் வைத்திருந்த ராஜபக்சே எந்த வித ஆவணங்களும் இன்றி பணத்தை கையாண்டுள்ளதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி மோசடி மற்றும் கணக்கில் வராத பணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சிறீசேனா அரசு முடிவு  செய்துள்ளதாக தெரிகிறது.
 
இலங்கையின் பெட்ரோலிய நிறுவனத்திற்கும், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கிக்கும் இடையே 7.5  பில்லியன் ரூபாய் அளவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இது  குறித்த ஆவணங்கள் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள 5 அறைகளில் இருப்பதாகவும், அவற்றை  அழிக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் அந்த 5 அறைகளையும்  மூடுமாறு இலங்கை மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், விமானங்களை  பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் அவரது மகன் நமல், சகோதரர் பசில் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் கட்டணம் செலுத்தாமல் விமானத்தில்  பயணம் செய்துள்ளனர். அதில் நாடாளுமன்ற உறுப்பினரான நமல் அதிகபட்சமாக 24 முறை  விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
 
அவர் பெல் 412 மற்றும்  எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளார். நமல், பசில், விமல் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை செய்த விமான பயணத்திற்கான நிலுவைத் தொகை மட்டும் ரூ. 830 லட்சம் ஆகும். இதற்கிடையில் சீசெல்ஸ் தீவில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்தும் விசாரணை  நடத்தவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொருளாதார அமைச்சர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் ராஜபக்சே  குடும்பத்தினர் சுவிஸ் வங்கிகளில் போட்டுள்ள பணம் குறித்து விசாரணை நடத்தவும் முடிவு  செய்யப்பட்டுள்ளதாக ஹர்சா தெரிவித்தார். இதனால் ராஜபக்சேவுக்கு எதிரான விசாரணை  மேலும் விரைவுபடுத்தப்படும் என தெரிகிறது.
 
ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்திய செய்திகளை இலங்கை டெலிவிஷன் நாள்தோறும் ஒளிபரப்பி வருகிறது. மேலும் ராஜபக்சேவின் சொந்த ஊரான தெற்கு மாகாணத்தில் தங்காலே என்ற இடத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ராஜபக்சேவின் சொத்துக்களை முடக்குவதற்கு சிறீசேனாவின் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து