முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக்காய்ச்சல்: பக்தர்களுக்கு முக கவசம்: தேவஸ்தானம்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு தெலுங்கானாவில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் வரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
 
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரம் காட்டி உள்ளது. முதல்வர் சந்திரசேகரராவ் கேட்டுக் கொண்டதன் பேரில் 3 பேர் கொண்ட மத்திய சுகாதார குழு நேற்று முன்தினம் ஐதராபாத் வந்து பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு கூடுதல் படுக்கை வசதியுடன் தனி வார்டு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் மட்டும் 249 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ குழு தலைவர் டாக்டர் அசோக்குமார்  தெரிவித்தார்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 69 பேர் காய்ச்சல் காரணமாக காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே இங்கு 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் ஆந்திராவிலும் பரவ தொடங்கியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தில் ஒருவர் பலியாகி விட்டார். கடும் குளிர் காரணமாக இந்த நோய் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
 
திருமலையில் தற்போது கடும் குளிர் காற்று வீசுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவதால் அவர்கள் மூலம் பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் கோவிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முக கவசம் வழங்கப்பட்டு உள்ளது.

முக கவசம் அணிந்தே அவர்கள் பணியாற்றுகிறார்கள். இதே போல் தர்ம தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருமலையில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரியிலும் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் தாக்கிய பக்தர்கள் யாரும் ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலிபிரி டோல்கேட்டில் ஒரு டாக்டரை நியமித்து கோவிலுக்கு வரும் பக்தர்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பன்றி காய்ச்சல் காரணமாக ஆந்திராவில் தடுப்பு மருந்துகளுக்கும், முக கவசங்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.வழக்கமாக 3 ரூபாய்க்கு கிடைக்கும் முக கவசம் தற்போது 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசி போட விரும்புவதால் தடுப்பு ஊசி விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து