முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடந்த கோலாகல குடியரசு தின விழா

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நாட்டின் 66வது குடியரசு தின விழா நேற்று தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியக் கொடி ஏற்றினார். கண்கவர் அணிவகுப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா பார்த்து பிரமித்துப் போனார்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் டெல்லி வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை 9.30 மணிக்கு குடியரசு தின விழா தொடங்கியது. 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் வந்தார். அங்குள்ள அமர்ஜோதி ஜவான் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை வந்தார். அவரை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி தனது மனைவியுடன் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். தலைவர்கள் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதையில் குண்டு துளைக்காத சுற்றிலும் கண்ணாடியால் ஆன சிறப்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

9.55 மணிக்கு அதிபர் ஒபாமா மனைவி மிச்செலுடன் காரில் வந்து இறங்கினார். அவரை பிரதமர் மோடி வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றார். அப்போது லேசாக மழை பெய்ததால் ஒபாமாவுக்கு ரெயின்கோட் அணிவிக்கப்பட்டது. சரியாக 10 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜபாதை வந்தார். அவரது காரின் இருபுறமும் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வந்தனர். விழா மேடை அருகே கார் நின்றதும் ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். அதிபர் ஒபாமாவும் சென்று ஜனாதிபதியை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து மத்திய மந்திரிகள், முப்படை தளபதிகள் உயரதிகாரிகளை ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். தேசிய கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது.

முதலில் ராணுவத்தில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் தியாகம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முகுந்த் வரதராஜனுக்கான அசோக் சக்ரா விருதை அவரது மனைவி முதலாவதாக மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து  நீராஜ் குமாரின் மனைவி விருதை பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆயுத படையின் முதன்மை தளபதி ஆகியோர் வணக்கம் செலுத்தி அணிவகுப்பை தொடங்கி வைத்தனர். வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பின் போது நமது ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரிகள் இடம் பெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் பி - 81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மர் போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு பெண் அதிகாரிகள் தலைமையேற்று நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த குழுவினர் அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து 1,200 சிறுவர், சிறுமிகளின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. தீரச்செயல் புரிந்ததற்காக தேர்வு செய்யப்பட்ட 20 சிறுவர் சிறுமிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்புகளும், கலைநிகழ்ச்சிகளும் 2 மணி நேரம் நடைபெற்றது. அதை ஒபாமா, பிரணாப் முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்தவாறு கண்டுகளித்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தது. அவற்றை பிரதமர் மோடி அவ்வப்போது ஒபாமாவுக்கு எடுத்து கூறி விளக்கமளித்தார். ஒவ்வொரு அலங்கார ஊர்தியும் வந்த போது அவர் எழுந்து நின்று கை அசைத்து உற்சாகப்படுத்தினார். விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது மனைவியுடன் வந்து கலந்து கொண்டார். பா.ஜனதா தலைவர் அமீத்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் க லந்து கொண்டனர். டெல்லியில் மழை பெய்ததால் முக்கிய பிரமுகர்கள் பலர் குடை பிடித்தபடி அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் பாரம்பரியப்படி சுதர் தலைப்பாகையும், கோட்சூட்டும் அணிந்து இருந்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால் தலையில் கம்பளியாலான தொப்பி அணிந்து இருந்தார். சரியாக 12 மணிக்கு தேசிய கீதம் இசைக்க குடியரசு தின விழா நிறைவு பெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினர் ஒபாமாவிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடை பெற்று சென்றார். அவரை குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து ஜனாதிபதி மாளிகைக்குன அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து