முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட அனுமதிக்க வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

மரியாதைக்குரிய மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சார்பாகவும், எங்களுடைய மாநிலத்தின் கருத்துக்களை இந்த முக்கிய பொருள் தொடர்பாக, இந்த முக்கியமான நேரத்தில் தெரிவிக்க வாய்ப்பினை தந்தமைக்காக எனது இதயங்கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன். நமது சிறந்த புலவர் திருவள்ளுவர் அவர்கள் கூறுகிறார். அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். செயல் முடிப்பதற்கு தேவையான சிறந்த கருவியோடு தகுந்த காலம் அறிந்து செய்தால், முடிப்பதற்கு அரிய செயல்கள் என்றும் ஏதும் இருக்காது.ஆம். சரியான கருவிக் கொண்டு உறுதியான முடிவினை மேற்கொள்வதற்கான நேரம் இப்பொழுதுதான் கனிந்துள்ளது.

புதிய திட்டத்தின் கருத்துரு, பயிர் மகசூல் இழப்பீடு மற்றும் குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு குறைவாக விற்பனை விலை ஆகியவற்றினால் உருவாகும் நிலவிடும் தருணத்திலும் நிலவும் இடர்களை கருத்தில் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளுக்கான சராசரி மகசூல் (மாநில அரசினால் அறிக்கையிடப்பட்ட இரண்டு பேரிடர் ஆண்டுகள் நீங்கலாக) 70 சதவிகிதம் எனும் சீரான ஈட்டுறுதி / காப்பீடு அளவு மற்றும் ஒப்பீட்டு விலையாக குறைந்தப்பட்ச ஆதரவு விலை ஆகியவற்றின் அடிப்படையில் உத்திரவாத வருமானம் கணக்கிடப்படுகிறது.

காப்பீட்டு தவணைத் தொகையானது தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தில் உள்ளபடி, குறைந்த அடிப்படைக்கு மாறாக வணிக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள திட்டமானது, பழைய திட்டமான மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் சில அம்சங்களையும், குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு கீழாக விற்பனை விலை நிலவிடும் சமயம் ஏற்படும் வருமான இழப்பினையும் ஈடுசெய்யும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான பயிர்களில் குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு குறைவாக சந்தை விலை அமைவது மிகவும் அரிதான நிகழ்வு எனும் உண்மையின் அடிப்படையில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையினை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு அம்சத்தினால் பயனில்லை. எனவே, மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண்மை திட்டமாகவே விவசாயிகளை சென்றடையும். மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் தவணைத் தொகை வணிக ரீதியில் கணக்கிடப்படுவதால், தவணை கட்டணமானது பெரும்பாலான மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

மேலும், காப்பீட்டுத் தவணை தொகையினை வரம்பிற்கு உட்படுத்துவதால் அதிக இடர் நிலவிடும் மாவட்டங்களில் காப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. தீரத்திலே படை வீரத்திலே – நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே உயர்ந்த நாடு நம் பாரத நாடு. என்றான் தமிழ்க் கவிஞன் பாரதி. பெருமையுடைய கவி.பாரதியின் பாதையினை பின்பற்றி நமது மரியாதைக்குரிய மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விவசாயிகள் எதிர்க்கொள்ளும் இடங்களினால் விவசாயிகளின் பால் இரக்கமடைந்துள்ளார்கள்.

மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முன்னாள் பிரதம மந்திரி அவர்களுக்கு மாறியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவதை எதிர்த்தும், மற்றும் அதிகமாக உள்ள காப்பீட்டுத் தவணைத் தொகையினை முழுமையாக மைய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியில் கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில், தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுகிறேன். புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தேசிய பயிர் வருவாய் காப்பீட்டு திட்டம் விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் என்பதால், இத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கவும் வேண்டுகிறேன். இப்புதிய திட்டத்தில் பிரிமியத் தொகை வணிக ரீதியில் கணக்கிடப்படுகிறது. அவ்வாறு வணிக ரீதியாக கணக்கிடப்படும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு வழங்கிய தொகையை பொறுத்து காப்பீட்டு நிறுவனம் பிரிமியத்தினை நிர்ணயிக்கும்.

கடந்த ஆண்டுகளில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் இயல்பாக இழப்பீடு அதிகமாக வழங்கப்பட்டிருக்கும். எனவே, இம்மாவட்டங்களில் பிரிமியத் தொகை அதிகமாக அமையும். அதிகப்படியான பிரிமியத்தை விவசாயிகளால் செலுத்த இயலாது என்பதால், காப்பீட்டுத் தொகை குறைக்கப்படுகிறது. பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச காப்பீடு வழங்குவது முரண்பாடாக அமைகிறது.

உதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் பயிருக்கான காப்பீட்டுத் தொகை இயற்கை சீற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.2322/- ஆகவும், இயற்கை சீற்றம் அதிகம் பாதிக்காத மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் ரூ.13148/- ஆகவும் அமைகிறது. மேலும், காப்பீட்டுத் தொகையோ நிர்ணயிக்கப்படும் கடன் தொகைக்கு குறைவாக உள்ளது. இது விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்படுத்துவதுடன் வங்கிகளால் பயிர்க் கடன் வழங்கப்படும் தொகையும் குறைய வாய்ப்புள்ளது.

தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே குறைந்தப்பட்ச பிரிமியத் தொகை என்பதால் இச்சூழல் ஏற்படாது. அதிகப்படியான பிரிமியம் விவசாயிகளின் செலவை அதிகரிப்பதோடு, அரசால் ஏற்கப்படும் பிரிமியத்திற்கான மான்ய செலவு அதிகரிக்கும். மத்திய அரசு ஏற்கும் மான்ய பங்கை கழித்த பின்னரும், மாநில அரசின் செலவு மூன்று முதல் நான்று மடங்கு அதிகரிக்கும். எனவே, பிரிமியத்திற்கான முழு மான்யச் செலவையும், மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பஞ்சாயத்து கிராம அளவில் மகசூல் கணக்கிடுவதற்கு அதிகப்படியான பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள கூடுதலாக அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள். தற்போது, பிர்க்கா அளவில் மகசூல் கணக்கிடப்படுகிறது. கூடுதலாக அலுவலர்கள் தேவைப்படுவதால், மேலும் மாநில அரசுக்கு செலவு அதிகரிக்கும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் உள்ளுர் விலை நிலவரம் அறியப்படுவது பொருத்தமாக இருக்காது. ஏனெனில், குறைந்த வரத்து உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் பொதுவாக சரியான விலையை குறிக்காது.

அதிகவரத்து, கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் மட்டுமே சரியான விலையை குறிக்கும். குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு கீழ் விலை நிலவினால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்பதால் அதிகவரத்து உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் வரத்து குறைந்து நலிவடையும். இச்சூழல் ஏற்பட்டால் அரசு கொள்முதல் நிலையங்களையே நம்பியிருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தற்போது, ஒரு சில பயிர்களுக்கு மட்டுமே குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அனைத்து பயிர்களுக்கும் குறைந்த ஆதரவு விலை கணக்கிடுவது என்பது சிக்கலானதாகும்.

அதுவும் குறிப்பாக, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலவும் சரியான விலையை கணக்கிடுதல் என்பதும் முடியாததாகும். சரியான விலையினை கணக்கிட முடியானபோது, விலை ஏற்றத்தாழ்வுக்கு இழப்பீடு வழங்குவது நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும், விலை ஏற்றத்தாழ்வால் கணக்கிடப்படும் இழப்பீட்டிற்கு காலதாமதமாகும் என்பதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது. பொது இரகங்களுக்கு நிர்ணயிக்கப்படும் சந்தை விலைகளால் சிறப்பு இரகங்களை பயிரிடும் விவசாயிகள் பயனடைவதில்லை.

இறுதியாக தேசிய அளவில் இழப்பீட்டுத் தொகை 500 சதவிகித பிரிமியத் தொகைக்கு மேலாக அதிகரிக்கும் சமயம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தற்சமயம் பங்கீடு செய்யப்படுகிறது. புதிய திட்டத்தில் இழப்பீடானது வசூலிக்கப்பட்ட பிரிமியத் தொகைக்கு 300 சதவிகிதத்திற்கு மேலாக இருந்தால் முழு இழப்பீட்டு தொகையினையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. இதனால் மாநில அரசின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும். இந்த காரணங்களினால், மாநில அரசு புதிய திட்டத்தினை அமலாக்குவதை எதிர்க்கிறது.

உலகு எல்லாம் ஒளி விளங்கும் உழவர் உழும் உழவாலே. ஆம்... உழுகின்ற உழவர்கள் தம் செயலால் தான் உலகமே ஒளியினை உமிழ்கிறது என்கிறார் எங்களது மூத்த தமிழ்க் கவிஞர்.....கம்பர். இந்த உண்மையினை அறிந்த நம்முடைய மரியாதைக்குரிய தலைவி. மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்த கோரிக்கையினை முன்பே எதிர்த்துள்ளார். எனவே, எங்கள் மரியாதைக்குரிய தலைவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் வேண்டுகிறேன். மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன்கள் கருதி தமிழகத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட அனுமதிக்கும்படி வேண்டுகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து