முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரலுக்குள் சென்னைக்கு 3 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டு தோறும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விட வேண்டும்.

இதை உறுதி செய்வதற்காக இரு மாநில தலைமை செயலாளர்கள் மத்தியில் 2 ஆண்டுக்கு ஒருமுறை உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2013–ம் ஆண்டு ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை செயலாளராக இருந்த போது சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆந்திர உயர் அதிகாரிகள் வந்து பங்கேற்றனர்.
அதே போல் இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை ஐதராபாத்தில் நேற்று மதியம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன், நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், குடிநீர் வாரிய அதிகாரிகள் சந்திரமோகன், பனீந்தர் ரெட்டி, முதன்மை என்ஜினீயர் முரளிதரராவ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுப்பிரமணியம், திருமாறன் பங்கேற்றனர்.ஆந்திர மாநிலம் சார்பில் அங்குள்ள தலைமை செயலாளர் சி.எஸ்.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடுவதை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தி பேசப்பட்டது. பருவ மழை சரிவர பெய்யாததால் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா தண்ணீரை எதிர்பார்த்து உள்ளதாகவும் கூறினர்.

கண்டலேறு அணையில் இருந்து 1900 கன அடி கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டாலும் ஆந்திர விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு 300 கன அடி தண்ணீர்தான் வந்து சேருவதாகவும் கவலை
தெரிவித்தனர்.

இதையறிந்த ஆந்திர அதிகாரிகள் பிப்ரவரி 1–ந்தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தினமும் 500 முதல் 600 கன அடி கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் 3 டி.எம்.சி. தண்ணீர் தரப்படும் என்றும் கூறினார்கள்.கண்டலேறு அணையில் இப்போது 18 டி.எம்.சி. தண்ணீர் உள்ளதால் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்படும் என்றும் உறுதி கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து