முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்தி சிதம்பரம் - ஈவிகேஎஸ் இளங்கோவன் மோதல் தீவிரம்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பை ஈவிகேஎஸ் இளங்கோவன் இரண்டொரு நாட்களில் வெளியிடு வார் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ப.சிதம்பரம் கோஷ்டிக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் வெளியேறியதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்ற இளங்கோவன் உடனடியாக ப.சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், கிருஷ்ணசாமி, பிரபு, குமரி அனந்தன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
மற்ற தலைவர்களும் இளங்கோவ னுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை உருவானது. கடந்த டிசம்பர் மாதம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சிறப்பு கூட் டத்தில் பங்கேற்று பேசிய கார்த்தி சிதம்பரம், காமராஜர் ஆட்சி என்று பேசுவதால் மட்டுமே எந்த பலனும் கிடைக்காது.இப்போதைய அரசியல் நிலைமைக்கேற்றவாறு காங்கிரசார் பிரச்சார உத்திகளை கையாள வேண்டும் என்று கூறினார். அதற்கு காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜி-67 என்ற பெயரில் தமது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திய கார்த்தி சிதம்பரம்  அங்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த கூட்டத்தை நடத்தியது கட்சியின்  நடவடிக்கைக்கு விரோதமானது எனக்கூறி அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். இம்மாதம் 30-ந் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டு இருந்தார்.
 
முதலில் இதற்கு விளக்கம் அளிக்கப் போவதாக தெரிவித்த கார்த்தி சிதம்பரம் இது போன்ற  நோட்டீஸ் அனுப்பு வதற்கு இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள தன் மீது டெல்லி தலைமை தான் நடவடிக்கை எடுக்க முடியும். மாநில தலைவர் இது குறித்த பரிந்துரையை அனுப்பலாமே தவிர நேரிடையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.மேலும் தம்முடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்சி விரோதமான எந்த கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மட்டுமே டெல்லியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உறுப்பினர்கள் எல்லாம் மாநில தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்தான் எனக் கூறும் இளங்கோவன் ஆதரவாளர்கள், 30-ந் தேதி மாலைக்குள் கார்த்தி சிதம்பரம் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியில் இருந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
 
ஏற்கனவே கே.வி.தங்கபாலு தலை வராக இருந்தபோது கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதை இளங்கோவன் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேநேரத்தில்  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்    மேலிடம்  தி,முகவுக்கு ஆதரவுஅளிக்க வேண்டும் என்பது இளங்கோவன்  கருத்து. ஆனால் அதை ப.சிதம்பரம் டில்லியில் தங்கியிருந்து  முறியடித்தார். அதேநேரத்தில் காங்கிரசைவிட்டு விலகிவிடுவேன் என்று  சிதம்பரம் கூறியுள்ளார்.இது தனது மகனைக்காப்பாற்றவே என்று அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே வாசன்   காங்கிரசைவிட்டு விலகியதால்  கலகலத்திற்கும் கட்சியில் ,சிதம்பரத்தின்  மிரட்டல் மேலிடத்தில் பலனளிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சூழலில்  கார்த்திக் சிதம்பரத்தைநீக்கி  காங்.கட்சிக்குள் கட்டுப்பாட்டை இளங்கோவன் கொண்டுவருவாரா? அல்லது மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுமா இன்று தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து