முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கான உத்தேச விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மாற்றுத்திறனாளி பட்டதாரி இளைஞர்கள், வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு சென்னையில் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களை கைது செய்த போலீசார், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் இறக்கி விட்டு வந்தனர்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, வக்கீல் நசரூல்லா என்பவர் கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்டு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, மாற்றுத்திறனாளிகளை கைது செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில், தமிழக அரசு ஏற்கனவே உத்தேச விதிமுறைகளை வகுத்து, சென்னை ஐகோர்ட்டில் மனுவாக தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அரசு வகுத்துள்ள உத்தேச விதிமுறைகள் சென்னை மாநகருக்கு மட்டும் பொருந்தும் என்பது போல் உள்ளது.

அந்த விதிமுறைகள் மாநிலம் முழுவதும் பொருந்தும் விதமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து, பின்னர் விடுவிக்கும்போது அவர்களை பஸ் நிலையங்களுக்கு அருகே இறக்கி விடவேண்டும். இந்த போராட்டங்களில் கண்காணிக்க மாநில மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். அரசு கொண்டு வந்த உத்தேச விதிமுறைகளை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

இந்த விதிமுறைகளை 4 வாரங்களுக்குள் அமல்படுத்தி, அதற்கான ஆதார ஆவணங்களை இந்த ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து