முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் சிலைக்கு கவர்னர் – முதல்வர் மலர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மகாத்மா காந்தியின் 68 வது நினைவு நாளையொட்டி சென்னை கடற்கரையில் நேற்று காந்தி உருவப்படத்துக்கு  கவர்னர் ரோசய்யா முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 68–வது நினைவு நாள் சென்னையில் நேற்று  கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையின் கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிலை அருகே பந்தலும் போடப்பட்டிருந்தது. அந்த பந்தலில் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் பஜனை பாடல்களை பாடினார்கள். காந்தியின் நினைவாக 5 பேர் அங்கு அமர்ந்து ராட்டையில் நூலை நூற்றனர். இந்த காட்சிகளை பொதுமக்கள், கண்டு களித்தனர்.

தமிழக கவர்னர் ரோசய்யா காந்தியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
சென்னை தலைமை செயலக வளாகத்தில் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் தீண்டாமை தடுப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை படித்தார். அவர் உறுதிமொழியை படிக்க அங்கிருந்த அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அந்த உறுதிமொழியை திருப்பி சொல்லி ஏற்று கொண்டார்கள்.

அந்த உறுதிமொழி வருமாறு:–

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்..இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து