முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தல்: இன்று பிரச்சாரத்தில் குதிக்கிறார் மோடி

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிரச்சாரத்தில் குதிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வரை டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் சமீபத்தில் எடுத்த கருத்து கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சதவீத ஓட்டுகள் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான ஒரு கருத்துக் கணிப்பில் பாஜகவும், ஆம் ஆத்மியும் தலா 31 முதல் 36 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.
 
மேலும் டெல்லி வாக்காளர்கள் கிரண்பேடியை விட அரவிந்த் கெஜ்ரிவாலையே முதல்வராக்க விரும்புகிறார்கள் என்றும் அதில் தெரியவந்தது. கெஜ்ரிவாலுக்கு 43 சதவீதம் பேரும், கிரண்பேடிக்கு 30 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் ஓய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் சூழ்நிலை மாறுவதை உணர்ந்த பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம் குறைந்து வருவதாகவும், டெல்லியில் மோடி அலை இல்லை என்றும் மக்களிடையே பேச்சு பரவி இருப்பதும் பாஜக மூத்த தலைவர்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே டெல்லி தேர்தல் பிரச்சார வியூகத்தை பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா அதிரடியாக மாற்றியுள்ளார்.

பாஜகவின் அனைத்து பிரிவு தலைவர்களையும் அவர் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் களமிறக்கி விட்டுள்ளார். அருண்ஜெட்லி தலைமையில் 11 மத்திய மந்திரிகள் தேர்தல் பிரச்சார பணிகளை ஒருங்கிணைத்து கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார்.
 
மோடி பேச மொத்தம் 4 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் முதல் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தொடர்ந்து 4 நாட்களுக்கு டெல்லியில் மோடி பேசவுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு டெல்லியில் ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். ஆனால் அப்போது எதிர்பாராத அளவுக்கு கூட்டம் திரண்டு வரவில்லையாம். எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு நடக்கும் பொதுக்கூட்டங்களுக்காவது மக்கள் ஆதரவு கிடைக்குமா என்று பாஜக மூத்த தலைவர்கள் தவிப்பில் உள்ளனர்.
 
கெஜ்ரிவாலின் கடைசி நிமிட புயல் வேக பிரச்சாரமும் பாஜக தலைவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அவர் தெரு தெருவாக நடந்து சென்று ஓட்டு வேட்டை நடத்துவதால் பாஜகவும், அதே பாணி பிரச்சாரத்தை கையாள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 120 பாஜக எம்.பி.க்களை அமீத்ஷா களம் இறக்கியுள்ளார். நேற்று முன்தினம் முதல் அவர்கள் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளையும் முற்றுகையிட்டுள்ளனர்.
 
டெல்லி வாக்காளர்களை கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காலனிகளில் வாழும் 25 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசி வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வழிகளில் பாஜகவுக்கு நெருக்கடி இருப்பதால்  தெருவுக்கு தெரு கூட்டம் நடத்த அமீத்ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வரும் 6ம் தேதிக்குள் 70 தொகுதிகளிலும் சுமார் 250 பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக வியூகம் அமைத்துள்ளது. தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. கிரண்பேடியை முன்னிறுத்தினால் ஓட்டுகளை அள்ளி விடலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் நினைத்தனர்.

ஆனால் கொள்கை திட்ட அறிவிப்புகள் உட்பட பல விஷயங்களில் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்படுவது அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை ஆம்ஆத்மி கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஒவ்வொரு பூத் அளவிலான பாஜக தொண்டர்கள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளது பாஜக. ஆயிரம் இடங்களில் பாஜகவின் திட்டம் பற்றிய பிரம்மாண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தன் முழு பலத்தையும் பயன்படுத்துவதால் டெல்லி தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து