முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவு நீர் கொட்டியதில் பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

சனிக்கிழமை, 31 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் கழிவு நீர் கொட்டிய விபத்தில், 10 பேர் பலியானார்கள். விபத்தில் பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

வேலூர் மாவட்டம்,  ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்துள்ள  சிட்கோ தொழில் வளாகத்தில் தனியார் பராமரிப்பில்  இயங்கி வந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் (Common Effluent Treatment Plant) நேற்று அதிகாலை கழிவுநீர் தொட்டி உடைந்து  அதிலிருந்த கழிவு நீருடன் கூடிய சேறு பக்கத்திலிருந்த தனியார் தோல் கம்பெனிக்கு சொந்தமான ஷெட்டின் மீது மொத்தமாகக் கொட்டியதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். அலியார்,. சுக்கூர்,. ஆசியர்கான்,. பியார்கான்,. அபீப்கான்,. ஷாஜகான்,  அலி அக்பர்,. குதூப்,. அக்ரம் கான் மற்றும் வேலூர் மாவட்டம், மேல்வல்லத்தைச் சேர்ந்த காவலாளி சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து  நான் மிகவும் துயரம்  அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின்  குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த  விபத்தில் வேலூர் மாவட்டம், கீழ்வல்லத்தைச் சேர்ந்த காவலாளி. ரவி என்பவர் காயமடைந்துள்ளார்  என்பதை அறிந்து நான்  மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வரும் இவருக்கு  நல்ல முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை அதிகாரிகளுக்கும், வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும்  மாண்புமிகு  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இவர்  விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.பி.மோகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.கே.சி.வீரமணி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்  திரு. ரவிக்கு 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின்  சடலங்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. . இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து