முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்றது ஜிம்பாப்வே

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் - ஹாமில்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பி பிரிவில் தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்றது ஜிம்பாப்வே. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான பி பிரிவு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியின் அதிரடி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணி சற்றே நிலை குலைந்தாலும், பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ஜேபி டுமினியின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டி ரன் குவித்தது. 340 ரன் இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்துக் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் குவின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டூ பிளஸ்சிஸ்ஸும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டிவில்லியர்ஸும் 25 ரன்களில் விழவே தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் டேவிட் மில்லரும், டுமினியும் இணைந்து நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் குதித்தனர். இதில் மில்லர் படு வேகமாக ஆடி சதம் அடித்தார். டுமினியும் தன் பங்குக்கு சூப்பர்ப் ஆக ஒரு சதம் போட்டார். மில்லர் சிறப்பாக ஆடி 135 ரன்களைக் குவித்தார். மறு முனையில் டுமினியும் அதிரடியாக ஆடி 115 ரன்களைக் குவித்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் 4 வி்க்கெட் இழப்புக்கு 339 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது.

ஜிம்பாப்வே தரப்பில் ஆரம்பத்தில் அபாரமாக இருந்த பந்து வீச்சை இந்த இரண்டு பேரும் சேர்ந்து கடைசி நேரத்தில் தவிடு பொடியாக்கி விட்டனர். ஜிம்பாப்வே தரப்பில் பன்யங்கரா, சதரா, சிகம்பரா, முங்கோஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 340 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தத் தொடங்கிய ஜிம்பாப்வே ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளித்து ஆடத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் சிபாபா சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். அதேபோல மஸ்கட்ஸா அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 80 ரன்களைக் குவித்தார். பிரென்டன் டெய்லர் 40 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். முதல் விக்கெட்டை 32 ரன்களில் இழந்த ஜிம்பாப்வே 2வது விக்கெட்டை 137வது ரன்னில்தான் இழந்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சைச் சமாளித்து ஆடி வந்தன ஜிம்பாப்வே வீரர்கள் கடைசி வரைப் போராடிப் பார்த்தனர்.

இருப்பினும் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலான்டர், மார்னி மார்க்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இம்ரான் தாஹிர் 3 விக்கெட் வீழ்த்தினார். டேல் ஸ்டெயின், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து