முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது அணு உலையில் 6 மாதங்களில் மின் உற்பத்தி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

திருநெல்வேலி - கூடங்குளம் 2ஆவது அணு உலையில் 6 மாதங்களில் மின் உற்பத்தி  தொடங்கும் என்றும், விரைவில் வெப்பநீர் சோதனை  நடைபெறவுள்ளதாகவும் அணு உலையின் கூடுதல் தலைமைப் பொறியாளர் எஸ். காளிராஜன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம்,  கூடங்குளத்தில் ரஷிய  நாட்டு நிதியுதவியுடன் தலா ஆயிரம்  மெகாவாட் கொண்ட அணு  உலைகளை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதில், முதலாவது அணு  உலையில் உற்பத்தி தொடங்கி ஆயிரம் மெகாவாட் என்ற முழு கொள்ளளவு எட்டப்பட்டுள்ளது.

முதல் உலையில் தொடர்ச்சியாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி  செய்யப்பட்டு, ஒப்பந்தப்படி தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம்,  புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பு மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2ஆவது அணு  உலையிலும் மின் உற்பத்தியைத் தொடங்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக 2ஆவது உலையில்  வெப்பநீர் சோதனை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இச்சோதனையைத் தொடர்ந்து மாதிரி எரிபொருள்  நிரப்பப்பட்டு மின்  உற்பத்திக்கான அடுத்தகட்ட இலக்கை எய்துவோம்.

தொடர்ச்சியாக அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று 6 மாதங்களில் மின் உற்பத்தியின் ஆயிரம் மெகாவாட் என்ற  அளவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணு உலையை கடந்த  ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தினமும் 150 பேர் என்ற அடிப்படையில் பார்வையிட்டு வருகின்றனர். தொடக்கத்தில் அணு உலை குறித்த புரிதல்  இல்லாததால் எதிர்ப்பு இருந்தது. இப்போது, உலை செயல்படத் தொடங்கிய பிறகு  அப்துல்கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள், அறிவியல் நிபுணர்கள்  கூறியதை பொதுமக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.  அணு உலையால் சுற்றுச்சூழலுக்கோ, கடல் நீருக்கோ, மீன் வளத்துக்கோ, இதர  வகைகளுக்கோ பாதிப்பில்லை என்பதை  உணர்ந்துள்ளனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து