முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துயிரூட்டியவர் ஜெயலலிதா

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா புத்துயிரூட்டியுள்ளார் என்று மதுரையில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு பேட்டிகளை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு மற்றும்  விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று பங்கேற்று தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்றினார்கள்.  இவ்விழா மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று  தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது,

தமிழக கலாச்சாரம் பாரம்பரியமிக்கது.  தமிழ்மொழி தொன்மையானதை போல் தமிழக விளையாட்டுகளும் மிகுந்த பாரம்பரியமிக்கது.  பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் தமிழக மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு பாரம்பரிய மிக்க விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம், கிளித்தட்டு, பல்லாங்குழி, நொண்டி, கில்லி மற்றும் கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுகளை நடத்தி ஆவணப்படுத்த மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.  நம் மாவட்டம் 2500 வருடங்களுக்கு முந்தைய பழமைவாய்ந்த மாவட்டம் கலைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் தலைநகரமாக விளங்கிய மாவட்டம்.  எனவே, பழமை வாய்ந்த விளையாட்டுகளை கற்றுக்கொள்வது எளிதானதாகும். 

தற்பொழுது மாணவர்களின் படிப்பு, தொலைக்காட்சி, கணிப்பொறி போன்றவற்றின் தாக்கத்தால் இதுபோன்ற பழங்கலைகளும், விளையாட்டுகளும் படிப்படியாக மறையத் தொடங்கி உள்ளது.  இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து மாணவர்களை மீட்டு வர இதுபோன்ற போட்டிகள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.  விளையாட்டின் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கிற விஷயங்கள் அளவற்றவை.  தற்பொழுது யோகா, தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்திய மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்தது பாராட்டுக்குரியது.  எனவே, இந்த பாரம்பரிய விளையாட்டுகளை கற்று பாரம்பரியமிக்க விளையாட்டுகளுக்கு புத்துயிரூட்டுங்கள்.  கல்வி போன்று விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேசிய அளவில், உலக அளவில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்  மேயர்வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ்      (மதுரை வடக்கு), பி.வி.கதிரவன் (உசிலம்பட்டி), ஆர்.சுந்தர்ராஜன் (மதுரைமத்தியம்) துணை மேயர் கு.திரவியம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் துரைப்பாண்டியன்,பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை.எம்.ராஜா, மாமன்ற உறுப்பினர் டி.ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர் கே.டி.ராஜ்குமார் வரவேற்றார்.  நிறைவாக விளையாட்டு இளைஞர் நல அலுவலர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து