முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணம்: 100 வழக்குகளை தொடுக்க திட்டம்

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - கருப்புப் பணம் பதுக்கியவர்கல் தொடர்பாக, நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்குகளைப்  பதிவு செய்ய வருமான வரித் துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கருப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என வருமான வரித் துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே கெடு விதித்தது. இதனால், கருப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துவதில் வருமான வரித் துறையினர் தீவிரமாக உள்ளனர்.

முன்னதாக, ஜெனீவாவில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கியில், கருப்புப் பணம் பதுக்கிய 628 பேர் கொண்ட பெயர்ப்பட்டியலை பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப் பெற்றது. அந்தப் பட்டியலைக் கொண்டு வருமான வரித் துறை விசாரணையைத் தொடங்கியது. இதில் அடையாளம் தெரியாதவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கல் என்ற அடிப்படையில் 200 நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
 
மீதமுள்ள 428 கணக்குகள் தொடர்பான விவரங்களில், முதல்கட்டமாக 240 பேர் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, 128 பேரின் சொத்துகளை மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்தது. மற்றவர்களின் சொத்துகளை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கருப்புப் பணம் பதுக்கியவர்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் ஓற்கெனவே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், மேலும் 100 பேர் மீது திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய் குற்றப்பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ரூ.3,200 கோடி வரி வருவாய் கிடைக்கும். கருப்புப் பணம் தொடர்பாக வருமான வரித் துறை நடத்தி வரும் விசாரணை நடவடிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் கண்காணித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளிடம் சட்ட உதவி மற்றும் ஒத்துழைப்பை கோருமாறு விசாரணை அமைப்புகளை அந்த வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரி தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாடுகளிடம் விவரங்களைக் கேட்டு வாங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் கடிதம் எழுதி, மார்ச் 6ம் தேதிக்குள் பதில் பெற்றிருக்க வேண்டும் என நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து