முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் மனித வெடிகுண்டாக மாறிய சிறுமி: 7 பேர் பலி

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கானோ - நைஜீரியாவின் வடகிழக்கே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் இளஞ்சிறுமி ஒருத்தி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலை தொடர்ந்து, நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனதன் கூறினார்.

நைஜீரியாவின் வடகிழக்கே யோப்பே மாநிலத்தில் போட்டிஸ்கும் நகரம் உள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்களை நைஜீரிய ராணுவத்தினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது 7 வயதான சிறுமி மார்க்கெட் பகுதிக்குள் நுழைய முயன்றாள். அவளை ராணுவத்தினர் தடுத்து வெளியே அனுப்பி கொண்டிருந்தனர். அந்த சிறுமி சிறிது தூரம் சென்றதும், தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தாள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இளஞ்சிறுமியின் தற்கொலை படை தாக்குதலில் அந்த சிறுமி உட்பட 7 பேர் பலியானார்கள். மேலும் மார்க்கெட் பகுதியில் இருந்த 19 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர்.  நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் கடந்த 9 ஆண்டு காலமாக தனிநாடு கேட்டு ஆயுதத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக 7 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளையும் ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற முதல் குழந்தைகள் தற்கொலைபடை தாக்குதலில் 6 பேர் பலியானர்கள். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

நைஜீரியாவில் வரும் 28ம் தேதி நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.  இத்தேர்தலில் தற்போதைய அதிபர் குட்லக் ஜோனதன் மீண்டும் போட்டியிடுகிறார். அதற்குள் நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். போகோஹரம் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் நடமாட்டங்களை பிரெஞ்சு படைகளின் உளவு தகவல்களுடன் சாட்,  கேமரூன், நைஜீரியா மற்றும் நைஜர் நாட்டு ராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாட் நாட்டின் தலைநகர் நிட்ஜாமினாவில் உள்ள பிரெஞ்சு ராணுவ தளத்தில் இந்த படைகளுக்கு அளிக்கப்படும் நேற்றுமுன்தினம் பிரெஞ்சு வெளியுறவு துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் பார்வையிட்டார்.

நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போகோஹரம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நைஜீரியாவும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று பிரெஞ்சு அமைச்சர் பேபியஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து