முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீத்தேன் வாயு திட்டம் குறித்து அச்சம் தேவையில்லை

திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை நிலக்கரி படுகை மீத்தேன் வாயு  திட்டம் குறித்து, யாரும் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை  என்று முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.  சட்டசபையில் நேற்று சட்டசபையில்  முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்   பேசியதாவது:

இங்கே பேசிய சில  உறுப்பினர்கள், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டம் பற்றிய கவலைகளை தெரிவித்தனர்.  இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய திமுகவும், அதன் உறுப்பினர் .ஐ.பெரியசாமியும், இது பற்றி பேசியது தான். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியினை, ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 2010 ஆம் ஆண்டு, மத்திய அரசு, ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்தது. இது தொடர்பாக மேற்படி நிறுவனத்துடன், 29.7.2010 அன்று மத்திய அரசு ‘உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம்’ ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனம், ஆய்வு மற்றும் உற்பத்தியைத் துவங்குவதற்கு ஏதுவாக, பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை (ஞநவசடிடநரஅ நுஒயீடடிசயவiடிn டுiஉநளேந) வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள, 50 கிராமங்களை உள்ளடக்கிய 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியில், ஆய்வு மற்றும் உற்பத்தியைத் துவங்க ஏதுவாக, பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கோரி, தமிழக அரசுக்கு 28.10.2010 அன்று மேற்படி நிறுவனம் விண்ணப்பித்தது. இதனைப் பரிசீலித்த முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு, பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை, நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் ஆணையை 1.1.2011 அன்று வழங்கியது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், 4.1.2011 அன்று, மேற்படி நிறுவனத்துடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்படுத்திக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில், இந்தத் திட்டத்திற்குத் தேவையான உரிமங்களை, பல்வேறு துறைகளிலிருந்து பெறுவதற்கும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும், உரிய உதவிகளை  தமிழ்நாடு அரசு செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேற்படி நிறுவனத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, ஆய்வுப் பணிகளை துவங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும். திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரியதற்கான அனுமதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படவில்லை.
திருவாளர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பெட்ரோலியம் ஆய்வு உரிமம், 31.12.2014 அன்று காலாவதியாகிவிட்டது.

இந்தத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, ஆய்வு  மேற்கொள்ள, ஒரு குழுவை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்  அமைத்தார்கள்.  மேலும், குழுவின் அறிக்கையைப் பெறும் வரையில், இந்த நிறுவனம் எந்தப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது எனவும், உத்தரவிட்டார்கள். இந்தக் குழு விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ‘மக்களுக்காகத் தான் திட்டங்கள்; திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்றும், ‘விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மாட்டோம்’ என்றும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்கள். 

அதன்படி தான் ‘குழாய் பதிப்பு பணியைத் தடை செய்தார்கள்.  எனவே, மீத்தேன் திட்டம் குறித்து, யாரும் எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை.  மீத்தேன் திட்டத்தை நிறுத்தி,  புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உத்தரவிட்ட நிலையிலும், பெட்ரோலிய ஆய்வு உரிமம் காலாவதியாகிவிட்ட நிலையிலும், அதைப் பற்றிய கவலையைத் தெரிவிப்பது, செத்த பாம்பை அடிப்பது போலத் தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 உறுப்பினர் .ஜே.ஜி.பிரின்ஸ் பேசும் போது தூத்துக்குடியில் வேதாகமத்தை இந்து மகா சபையினர் அவமதித்தனர் என்று கூறினார்.  அது குறித்து காவல் துறையினர் அறிக்கை பெற்று விபரம் தெரிவிப்பதாக நான் தெரிவித்தேன். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய சரகம் முடிவைத்தானேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 20.01.2015 அன்று கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பள்ளி தலைமையாசிரியை லீலாபுஷ்பம் என்பவரது அனுமதியுடன் அப்பள்ளி மாணவர்களுக்கு ‘புதிய ஏற்பாடு’ பைபிள் பிரதிகளை இலவசமாக விநியோகம் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மேற்படி பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியையிடம் விபரம் கேட்டுள்ளனர். இதனையடுத்து தலைமையாசிரியை பள்ளியில் மாணவர்களுக்கு பைபிள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு, மாணவர்களிடமிருந்து 135 ‘புதிய ஏற்பாடு’ பைபிள்களை திரும்பப்பெற்று இந்து முன்னணியினரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அவர்கள் மேற்படி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றபோது பத்திரிக்கை நிருபர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அதனை பத்திரிக்கையாளர்களுக்கு காண்பித்துவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்ததோடு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றினையும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஆறுமுகநேரி தேவ ஊழியர் இயக்கத்தின் தலைவர் மோசஸ் என்பவர் 29.01.2015 அன்றும், தூத்துக்குடி பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பால் ஆண்ட்ரு என்பவர் 02.02.2015 அன்றும் இந்து முன்னணியினர் புதிய ஏற்பாடு புத்தகங்களை அவமரியாதை செய்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

காவல்துறையினர், இப்பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று தலைமை ஆசிரியை அனுமதியுடன் மாணவர்களுக்கு ‘புதிய ஏற்பாடு’ பைபிள்கள் வழங்கப்பட்டது உண்மையென்றும், இந்து முன்னணியினர் பத்திரிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க புதிய ஏற்பாடு புத்தகங்களை புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளனரே தவிர, அவற்றை அவர்கள் அவமரியாதை செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, ‘புதிய ஏற்பாடு’ பைபிள் புத்தகங்களை இந்து முன்னணியினர் அவமரியாதை செய்து மதக்கலவரத்தை தூண்ட முயன்றனர் என்பதில் உண்மை இல்லை.

மேலும், கிருத்தவ இயக்கங்களை சேர்ந்தவர்கள் இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்தபோது, மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை கண்ணியத்துடன் நடத்தி அவர்கள் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களது வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மத நல்லிணக்கத்திற்கு ஊறு ஏற்படாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மனுக்கள் விசாரணையில் இருந்து வருகின்றன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, குற்றச்சாட்டு கூறியவர்களுக்கும், ஆலோசனைகளை, கருத்துக்களை வழங்கிய மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என்னுடைய பதிலுரை மூலம் தக்க விளக்கங்களை தந்துள்ளேன். 

எனது விளக்கங்களை, இந்த பதிலுரையை ஏற்றுக் கொண்டு  மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கொடுத்துள்ள திருத்தங்களை மாண்புமிகு உறுப்பினர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தருமாறு,  பேரவைத் தலைவர் வாயிலாக, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து