முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்கு மேலும் 30 காவல் நிலையங்கள்

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்கு மேலும் 30 காவல்நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார்.

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படை ‘மீனவர்கள் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு குறித்து, ‘சைக்கிள் பேரணி- மோட்டார் சைக்கிள் பேரணி’ என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சென்னை-கன்னியாகுமரி இடையே பாய்மர படகு விழிப்புணர்வு பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடலோர பாதுகாப்பு படை(கிழக்கு பிராந்தியம்) ஐ.ஜி. எஸ்.பி.சர்மா, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையின் கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு, தமிழ்நாடு பாய்மர படகுகள் சங்கத்தின் தலைவர் அசோக் தத்தார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கலந்துகொண்டு பாய்மர படகு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து 2 பாய்மர படகுகளில், கடலோர பாதுகாப்பு படை, ராணுவம், தமிழ்நாடு பாய்மர படகு சங்கம், மீனவர்கள் என 12 பேர் கொண்ட குழு கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. பாய்மர படகு பயணம் குறித்து, கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டியளித்ததாவது:-

தமிழக கடலோர பாதுகாப்பு படைக்கு கண்ணும், காதுமாக மீனவர்கள் இருந்து வருகிறார்கள். மீனவர்கள், கடலோர பாதுகாப்பு படை இடையே உள்ள இணைப்பு பாலத்தை மேம்படுத்தவும், கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், பாய்மர படகு பயணம் தொடங்கி உள்ளது.புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தொண்டி, மண்டபம், தூத்துக்குடி வழியாக 980 நாட்டிகல் தூரம்(கடல் தொலைவு) கொண்ட கன்னியாகுமரியை மார்ச் 3-ந்தேதி பாய்மர படகு பயணம் சென்றடைகிறது.

இந்தியாவில் உள்ள 9 கடலோர மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக கடலோர பாதுகாப்பு படை குழுமம் தொடங்கப்பட்டது.தற்போது 12 காவல்நிலையங்கள், 60 சோதனை சாவடிகள், 30 அதிநவீன ஆயுதங்கள் கொண்ட ரோந்து படகுகள் மூலம், தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் ரோந்து பணி இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூடுதலாக 30 காவல்நிலையங்களும், 40 சோதனை சாவடிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்பு படை குழுமத்தில் 500 மீனவ இளைஞர்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். மேலும் 500 மீனவ இளைஞர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கடலோர பாதுகாப்பு படை(கிழக்கு பிராந்தியம்) ஐ.ஜி. எஸ்.பி.சர்மா நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக கடல் எல்லைகள் 7 ரேடார் கருவிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்டபம் பகுதியில் நீரிலும், நிலத்திலும் சீறி பாயும் 4 ரோவர் படகுகள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் எந்நேரமும் விழிப்புடன் இருந்து வருகிறார்கள்.’ என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து