முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற லோக்சபையில் இன்று 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மூலம் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று மரபுப்படி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மறுநாள் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

காரணம் இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரான மசோதா என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முழுமையான முதல் ரயில்வே பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான ரயில்  திட்டங்கள் பற்றியும், நிதி ஒதுக்கீடு பற்றியும் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கு பிறகு கடந்த 6ம் தேதி தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் சென்னை, குமரி இடையே இரட்டை அகல ரயில் பாதை உள்ளிட்ட 10 முக்கிய ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். மெட்ரோ ரயில் திட்டம், பறக்கும் ரயில் திட்டம் போன்றவை தொடர்பாகவும், அதற்கு தேவையான நிதி தொடர்பாகவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
 
கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்திற்கு இரண்டு ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி பல ரயில்கள் இயக்கப்பட்டன.

ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் மட்டும் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை பட்ஜெட்டில் அறிவித்தபடி புதிய ரயில்களும் விடப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக மக்கள் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள். தமிழக அரசும் போதிய நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசு நமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா என்பது இன்று தெரியவரும்.

முன்னதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பட்ஜெட் தாக்கல் குறித்து துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். ரயில்வே துறை தற்போது நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அத்துறையை மேம்படுத்த விரும்பும் சுரேஷ் பிரபு பல்வேறு திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க கூடும். இந்த பட்ஜெட் மூலம் ரயில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

காரணம், டீசல் விலை குறைந்தாலும் ரயில் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சர் ஏற்கனவே அறிவித்து விட்டார். மேலும் ரயில்வேயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நிதி தேவைப்படுவதாகவும் ரயில்வேயிடம் நிதி பற்றாக்குறை இருந்து வருவதாகவும் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள சுமையை மக்களும்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆகவே ரயில் கட்டணம் குறையாது என்பது நன்றாக தெரிகிறது. மேலும் ரயில்வே துறையில் தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பு நிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. பயணிகளுக்கு ரயில் நிலையங்களிலேயே உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அதாவது காங்கிரஸ் கூட்டணி அரசால் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் நிலுவையில் உள்ளன.

திருச்சி - நாகர்கோவில், செங்கல்பட்டு - திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி கிடக்கிறது. சென்னை - குமரி இருவழி பாதை அமைக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. சென்னை ராயபுரம், தாம்பரம் ரயில் நிலையங்களை ரயில் முனையங்களாக மாற்றப்படும் என கடந்த 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் ரயில்வே சம்பந்தமாக சில திட்டங்கள் முடியாமல் பாதியிலேயே நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற இந்த பட்ஜெட்டில் அரசு கோரியபடி போதிய நிதி ஒதுக்கப்படுமா, புதிய ரயில்கள் விடப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. நாளை 27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 28ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை தொடர்பாக சில அறிவிப்புகளை அவர் வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து