முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னை தெரசாவை அவமதிக்கக்கூடாது: ராமதாஸ்

புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

எந்த பலனையும் எதிர்பாராமல் தூய தொண்டுள்ளத்தோடு சேவை செய்து 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அன்னை தெரசா. இத்தகைய பெருமைகளைப் பெற்ற இவரது நோக்கமே இந்திய மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதுதான் என்று மோகன் பகவத் கூறியிருப்பதை விட மோசடித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் திரிபு வாதங்களை செய்வதில் வல்லவர்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவை யில்லை.
மதங்களுக்கு அப்பாற்பட்டவராக மனித இனத்திற்கான சேவை மூலம் சகோதர சக வாழ்வை உருவாக்க தமது வாழ்க்கையையே அர்ப்பணித்த அன்னை தெரசாவின் சேவைகளை பாராட்டுவதற்கு மனமில்லை என்றாலும் குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம்.

சிறுபான்மை மக்களிடம் பெரும்பான்மை சமுதாயத்தினர் பெருந்தன்மையோடும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த வேண்டும் என்ற ரகசிய திட்டத்தின் அடிப்படையில் உள்நோக்கத்தோடு செயல்படுவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.

எனவே, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கம் தழைக்க சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்.இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் :

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பாகவத்தின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார்.தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டனர்.

இப்படிப்பட்ட சேவைக்கு மோகன் பாகவத் உள்ளர்த்தம் கற்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த குற்றச்சாற்றை அவரது மனசாட்சி கூட ஏற்றுக்கொள்ளாது. அன்னை தெரசாவின் சேவையை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதை விட, மதமாற்றம் குறித்த சர்ச்சைத் தீ அவிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் மோகன் பாகவத்தின் நோக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து