முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே பட்ஜெட்: வைகோ கண்டனம்

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2014 ல் பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற உடனேயே பயணிகள் கட்டணம் 14.2 விழுக்காடு, சரக்குக் கட்டணம் 6.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. தற்போது பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தைக் குறைப்பதற்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முயற்சிக்கவில்லை.

ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் 8.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் தேவை என்றும், தனியார் அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துவிட்டு, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது.

ரயில்வே துறையின் நிலங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆபத்து உருவாகி இருக்கின்றது. தமிழ்நாட்டின் இன்றியமையாத தேவைகளான இராயபுரத்தில் புதிய முனையம் அமைப்பது, சென்னை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதை, அகலப்பாதைத் திட்டங்கள், ஆய்வு செய்யப்பட்ட புதிய வழித்தடங்கள் அமைத்தல், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய ரயில் சேவை, மற்றும் புறநகர் ரயில்சேவை விரிவாக்கம் போன்றவை குறித்து இந்த ரயில்வே பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

ரயில்வே திட்டங்களுக்காக மாநிலங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கையேந்த வேண்டிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது. ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், ரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது.'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து