முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முதல்வராக நாளை முப்தி முகமது பதவியேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக மக்கள் ஜனநாயக  கட்சி நிறுவனர் முப்தி முகமது சயீது நாளை 1ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முப்தி முகமது தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி 25 இடங்களை கைப்பற்றியது. தேசிய மாநாட்டு கட்சி 15 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு அளிக்க முன்வந்தது. ஆனால் மக்கள் ஜனநாயக கட்சி அதை ஏற்கவில்லை. இதையடுத்து திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாஜக ஆதரவளிக்க முன்வந்தது. இந்த கட்சியின் ஆதரவை ஏற்க ஆரம்பத்தில் சற்று தயங்கிய மக்கள் ஜனநாயக கட்சி பிறகு மெல்ல மெல்ல தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதையடுத்து இரு தரப்பினரும் பலமுறை சந்தித்து பேச்சு நடத்தினார்கள். இறுதியாக பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியமைக்கும் என்று தகவல்கள் வெளிவர தொடங்கின.

இந்த நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனர் முப்தி முகமது சயீது டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்துபேசினார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு முப்தி முகமது பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பிரதமரை சந்தித்து பல விஷயங்கள் குறித்து பேசினேன். ஜம்மு காஷ்மீரை அமைதியான மாநிலமாக்க வேண்டும் என்பது எனது லட்சிய கனவாகவே இருந்தது. அது பற்றி பிரதமரிடம் பேசினேன்.

குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் பேசினோம். பதவியேற்பு விழாவிற்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். 1ம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இவ்வாறு முப்தி முகமது நிருபர்களிடம் தெரிவித்தார். குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து போகப்போக தெரியும் என்று அவரது மகள் மெகபூபா முத்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாளை காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது பதவியேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இவர் பதவியேற்பதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலவிய நெருக்கடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து