முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கேஸ் மானியம்: தமிழக அரசு பதில்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - சமையல் கேஸ் நேரடி மானிய திட்டத்தில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானிய திட்டத்தை ரத்து செய்து பழைய முறையில் மானியம் அளிக்க கோரி சிவகாசியை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு மத்திய பெட்ரோலிய துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய பெட்ரோலிய துறை அண்மையில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் போலி எரிவாயு இணைப்புகளை நீக்க இத்திட்டம் அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் எஸ். கோபாலகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.

சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவதை கட்டாயமாக்க கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. தற்போது வங்கி கணக்குகளை மட்டும் சமர்ப்பிக்க கோரியுள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தவரையில் மானியம் முழுவதும் மத்திய அரசின் மூலமே வழங்கப்படுகிறது. மேலும் இது இந்திய அளவில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். எனவே இதில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை. தமிழக அரசை பொறுத்தவரை அரசின் சலுகை திட்டங்களில் வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளுக்கு ஏற்கனவே வங்கிகள் மூலம் அளித்து வருகிறது.

எனவே மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்களில் மத்திய அரசு மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக அளிப்பதை அரசு ஏற்காது. குறிப்பாக பொது விநியோகம் மூலம் வழங்கப்படும் பொருள்கள், மண்ணெண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றுக்கு மானியத்தை மத்திய அரசு நேரடியாக வங்கிகளில் செலுத்த கூடாது. இந்த விஷயத்தில் மானியத்தை விட அத்தியாவசிய பொருள்கள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்கே அரசு முக்கியத்ததுவம் அளிக்கிறது. சமையல் எரிவாயு மானியத்தை பொறுத்தவரை மற்றொரு முக்கிய கோரிக்கையை பிரதமருக்கு தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

அதாவது கிராமங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் தபால் அலுவலகங்களிலும் கணக்குகள் வைத்திருக்கும் கிராம மக்கள் நேரடி மானிய திட்டத்தில் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது என வலியுறுத்தினார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை மார்ச் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து