முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 29 மீனவர்களையும் அவர்களது 3 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு,

இலங்கை கடற்படையால் கடந்த 26ம் தேதியன்று தமிழக மீனவர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட இது போன்ற சம்பவங்கள் நடப்பது துரதிஷ்டவசமானது. தமிழக மீனவர்கள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக புரட்சித் தலைவி அம்மா இடைவிடாமல் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த நிலையில் கட்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா நடைபெற உள்ள சூழ்நிலையில் மீனவர்கள் அதைக் கொண்டாடும் உணர்வில் இருக்கின்ற நேரத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மீனவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கின்ற வகையில் இலங்கை கடற்படை 29 மீனவர்களை கைது செய்து அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே இலங்கை வசம் நீண்டகாலமாக இருந்த 81 படகுகள் எப்போது வரும் என்று மீனவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த படகுகள் அம்மாவின் முயற்சியாலும் அரசின் முயற்சியாலும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 10லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். இவர்களது பிரச்சனையை தீர்க்க இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று அவர்களுக்காக ரூ.1520 கோடி சிறப்பு நிதித்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவேண்டும்.

ஆண்டு தோறும் ரூ.10 கோடி பராமரிப்பு செலவுக்காக வழங்கப்படவேண்டும். அப்போது தான் மீனவர்களின் சமூக பொருளாதார அந்தஸ்து உயரும். இரண்டாவது வழி என்னவென்றால் 1974-76 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும். அப்போது தான் பாக். ஜலசந்தியில் மீன்பிடிக்கும் நமது பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்படும். இது தொடர்பாக புரட்சித் தலைவி அம்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுத்துள்ளார். எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 29 மீனவர்களையும் அவர்களின் 3 படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து