முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று 2015-16ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பாக சில சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மரபுப்படி ஜனாதிபதி உரையாற்றினார். பின்னர் 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. அதே போல் பயணிகள் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. புதிய ரயில்களும் விடப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற லோக்சபையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2015-16ம் ஆண்டுக்கான இந்த பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை படிக்க தொடங்கிய அவர், 12.35 மணியளவில் பட்ஜெட் உரையை முடித்தார். இடையிடையே தண்ணீரும் குடித்துக் கொண்டார்.

சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட போது அவற்றை இந்தியிலும் படித்தார் அருண்ஜெட்லி. தனது பட்ஜெட்டில் அவர் வாசித்த உரை வருமாறு:-

வேலைவாய்ப்பை உருவாக்குதல், வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொருளாதார மேம்பாட்டிற்காக கடந்த 9 மாதங்களாக மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பை சம அளவில் எதிர்பார்க்கிறோம். செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செலவழிக்கப்பட வேண்டும். நிதி பற்றாக்குறையை மிக அதிகமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி இறக்கை கட்டி பறக்கும் காலம் வந்து விட்டது.

உலகின் 2வது சிறந்த பங்குச்சந்தை இந்திய பங்குச் சந்தையாகும். சாமானிய மக்களின் சுகாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் புதிய முகத்தை வழங்கி வருகிறது. சாமானிய மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். பணவீக்கத்தை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளோம். 8 முதல் 8.5 விழுக்காடு வரை பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

7.4 சதவீத ஜீ.டி.பி. வளர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சி விரைவில் இரட்டை இலக்கை அடைந்தாலும் அதில் வியப்பில்லை. 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு  என்ற இலக்கு எட்டப்படும். 2020க்குள் நாடு முழுவதும் ஒரு லட்சம் கி.மீ தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். அனைத்து கிராமங்களையும் இணைக்க சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பை வழங்குவார்கள்.

2022ல் இந்தியா உலகின் பணக்கார நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கிராமப்புற மக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகள் அளிக்கப்படும். 26 ஆயிரம் கிராமங்களில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு கல்வித்தரம் உயர்த்தப்படும்.
 
வரும் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு 5 லட்சம் கோடி நிதி அளிக்கப்படும். மாநிலங்களிடம் இருந்து பெறும் வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கே வழங்கப்படும். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகள் கட்டப்படும். சரக்கு, சேவை வரி 2016ல் நடைமுறைக்கு வரும். 2022ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை என்ற நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையை வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து