முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை போராடி வென்றது நியூசிலாந்து

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து - ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டத்தால் 151 ரன்னை போராடி நியூசிலாந்து வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் வெற்றி பெறும் முக்கிய அணிகளில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் நேற்று மோதியது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலம் வாய்ந்த அணி என்று கருதப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் வெறும் 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து குறைந்த ஓவர்களிலேயே 151 ரன்னை எட்டி விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. அவர்களும் மிகப் பெரிய போராட்டத்துக்கு பிறகே ஆஸ்திரேலியாவை வெற்றி கண்டனர்.

உலக கோப்பையை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள்  நியூசிலாந்தின் ஆக்லாந்து மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவை இவ்விரு அணிகளும், என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதில், நியூசிலாந்து ஏற்கனவே இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தளவில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே அந்த போட்டியில் ஒரு புள்ளிதான் கிடைத்தது.

இவ்விரு அணிகளும் இந்திய நேரப்படி நேற்று காலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தொடங்கிய போட்டியில் மோதின. கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆடாத ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இப்போட்டிக்கு உடல் தகுதி பெற்றார். எனவே ஜார்ஜ் பெய்லி இப்போட்டியில் ஆடவில்லை.டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து விளாசிக் கொண்டிருந்தபோது டிம் சவுத்தி பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். 23 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன், வெட்டோரி பந்து வீச்சில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அப்போது ஆஸ்திரேலியா, 13 ஓவர்களில், 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன்பிறகுதான் ஆஸ்திரேலியாவின் சரிவு ஆரம்பித்தது. டேவிட் வார்னர் 34 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும், மேக்ஸ்வெல் 1 ரன்களிலும், கேப்டன், மைக்கேல் கிளார்க் 12 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். மிட்சேல் மார்ஷ், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில், ஜான்சன் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். ஓரளவு போராடிய விக்கெட் கீப்பர் ஹேடின் 43 ரன்களில் வீழ, 32.2 ஓவர்களிலேயே, 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. பாட் கமின்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஓரளவு வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்டது டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சுதான். 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெட்டோரி மற்றும் டிம் சவுத்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பலம்மிக்க ஆஸ்திரேலியாவை 151 ரன்களுக்குள் மடக்கிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி பேட்டிங்கை தொடங்கினர்.

தொடக்க வீரர்கள், மார்டின் குப்தில் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவருமே அதிரடி காண்பித்தனர். இருப்பினும் 11 ரன்கள் எடுத்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் பந்து வீச்சில் பட் கம்மின்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் குப்தில். மறுமுனையில் தாண்டவம் ஆடிய மெக்கல்லம், 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

ஆனால் மறுபக்கமோ விக்கெட்டுகள் மளமளவென சரிவடைய தொடங்கின. ரோஸ் டெலர் 1 ரன்னிலும், கிரான்ட் எலியட் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆக 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து. இருப்பினும் கேன் வில்லியம்சன் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி நிதான ஆட்டம் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோரி ஆன்டர்சன் அவுட் ஆனார்.

அப்போது அணியின் ஸ்கோர் 131 ரன்களுக்கு, 5 விக்கெட் என்ற அளவில் இருந்தது. மேற்கொண்டு, 21 ரன்களே தேவைப்பட்டன.ஆனால் நிலைமை அப்போதுதான் தலைகீழாக மாறியது. அணியின் ஸ்கோர் 145ஆக இருந்தபோது டேனியல் வெட்டோரி, 146 ரன்களாக இருந்தபோது ஆடம் மில்னே மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். 22.4 ஓவர்களில் நியூசிலாந்து 146 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் மில்னே, டிம் சவுத்தி ஆகியோர் ஸ்டார்கின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர். ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நியூசிலாந்து வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால் நியூசிலாந்தின் அதிருஷ்டம், அடுத்த ஓவரை சந்திக்கும் வாய்ப்பு வில்லியம்சனுக்கு கிடைத்தது. என்ன நடக்குமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்சர் தூக்கி வெற்றியை வசப்படுத்தினார் வில்லியம்சன். 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை மிரட்டினார் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க். இருப்பினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முடக்கிய டிரென்ட் பவுல்ட்டுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்திலுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து