முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கார் மீது லாரி மோதியதில் 6 பக்தர்கள் பலி

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

திருமலை - திருப்பதியில் நேற்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து 10 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஒரு காரில் நேற்று முன்தினம் புறப்பட்டு வந்தனர். காரை, காஜாவலி என்பவர் ஓட்டி வந்தார். காரில் பயணம் செய்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த ஏர்ப்பேடுகிராமம் அருகே நேற்று அதிகாலை 5 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து நெல்லூர் நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்றது. இந்த லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சுக்குநுறாக நொறுங்கியது.

காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இறந்தவர்கள் பெயர் விவரம்:
வெங்கடேஸ்வரலு, பார்கலி, திருபால், கோட்டீஸ்வரம்மா, டிரைவர் காஜாவலி, மற்றொருவர் பெயர் தெரியவில்லை.
படுகாயம் அடைந்த 5 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களது அலறல் சத்தம்கேட்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஏற்ப்பேடு போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தை சீர் செய்தனர். இது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலை வீசி தேடிவருகின்றனர். திருப்பதிக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலை நடந்த கோர விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து