முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல்–டீசல் விலை உயர்வு: கருணாநிதி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் என்பது வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு முறை விலையைக் குறைத்தால், அதற்காக நாம் மகிழ்ச்சி அடைவதற்குள்ளாக; விலையை அதிகமாக்கிய அறிவிப்புகள் மூன்று முறை வருகின்றன.உதாரணமாக கடந்த 16–ந்தேதி அன்று தான் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டது. 14 நாட்கள் தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் இன்றையதினம் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 18 பைசா அளவுக்கும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 9 பைசா அளவுக்கும் உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது.

இதற்குக் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பவும், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புக்கு ஏற்பவும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன என்று கூறப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அதன் முழுப்பலனையும் நுகர்வோருக்கு வழங்கிட முன்வராத அரசாங்கம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போது மட்டும், அதனை அப்படியே நுகர்வோரின் தலையிலே சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசு தான் விளக்க வேண்டும்.

மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதத்தோடு எடுத்துச் சொன்ன நேரத்தில், தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பையும் ஒரு காரணமாகச் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்களிலிலிருந்து பெட்ரோல் விலை பத்து முறையும், அக்டோபர் மாதத்திலிருந்து டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 3–ந்தேதி விலை குறைக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி 16–ந்தேதி ஒரு முறையும், தற்போது நேற்றையதினம் 28–2–2015 அன்று ஒரு முறையுமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்து விட்ட காரணத்தால், தற்போது அந்த எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படியும், விலை உயர்வு சாதாரண, சாமான்ய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமலும் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.

எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு முடிவினை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் காண்பதற்கு; பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 55 டாலராக இருந்தது. தற்போது 61 டாலராக உயர்ந்துவிட்டது என்கிற காரணத்தைக் காட்டி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ..3.18 ஆகவும், டீசல் விலையை ரூ.3.09 ஆகவும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.மத்திய, நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றம் அடைந்த மக்களின மீது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல பெட்ரோல் டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்தியிருக்கிறது.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்தது.

தற்போது 61 டாலராகத்தான் உள்ளது. அப்போதிருந்த விலையை விட 60சதவீதம் விலை குறைந்திருப்பதால், இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40, டீசல் விலை 30 என விற்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் இப்போது பெட்ரோல் விலை ரூ.63.31 ஆகவும் டீசல் விலை ரூ.52.90 ஆகவும் உயர்த்தியிருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பயனை கலால் வரி, விற்பனை வரி என விதித்து மத்திய அரசு வருமானத்தை பெருக்கிக் கொண்டு வருகிறது.மக்களின் மீது இருக்கின்ற சுமையை குறைப்பதற்கு கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சி அதிக அளவில் மானியங்களை கொடுத்து வந்தது.

ஆனால் மத்திய பா.ஜ. க. அரசோ மானியங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு மக்களின் மீது சுமையை ஏற்றுவதற்கு கடும் முயற்சி செய்கிறது.இந்த நடவடிக்கைகள் மூலமாக மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிற மோசமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரத்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த சிலமணி நேரங்களுக்குள் பெட்ரோல், டீசல் விலைகளை 3ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.பட்ஜெட் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்து விட்டு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம் என்கிற நம்பிக்கையும் தெரிவித்து விட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகவும், அதன் மூலம் பணவீக்கத்தை அதிகரிக்க காரணமாகவும் உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு எந்த வகையில் நியாயம் என்று புரிய வில்லை.தற்சமயம் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதற்கு எந்த ஒரு தேவையும் உருவாகவில்லை. கச்சாஎண்ணெய் விலை பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் பெரும்சரிவு இல்லை. அப்படி இருக்கையில் பெட்ரோல், டீசல்விலை 3 ரூபாய்க்கு மேல் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது குறைத்து அறிவித்தது, சில மாநிலங்களில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டுத்தானோ என்கிற ஐயம் இப்போது எழுகிறது. குறைக்கும் போது, 0.50பைசா, ஒரு ரூபாய் என்று குறைத்துவிட்டு, உயர்த்தும் போது ஒரேயடியாக உயர்த்தியிருப்பது மக்களை ஏமாற்றுவதற்கு சமமாகும்.

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கடுமையாக் கண்டிப்பதோடு அதிகரிக்கப்பட்ட விலைகளை திரும்பப்பெற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து