முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழிற்சங்கத்தினர் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை- போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மீது திமுகவினர் திடீரென கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து  சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சு வார்த்தை நடத்த நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத்தை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அதிகாரிகளின் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரிடம்  கடந்த சில நாட்களுக்கு முன்பு  தொழிற்சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நேற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ,. தலைவர் தாடி.ம.ராசு, திமுக தொழிற்சங்கம் சார்பில் சண்முகம் மற்றும் நடராஜன், சி.ஐ.டி.யூ சார்பில் செளந்தரராஜன் எம்.எல்.ஏ , ஐ.என்.டி.யூ.சி விஷ்ணு பிரசாத், உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்களை சேர்ந்த தலா இருவர் பங்கேற்றனர். நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்து செயலாளர் பிரபாகர் ராவ், மற்றும் போக்குவரத்துக்கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் பங்கேற்றனர். நேற்று பகல் 12-30 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை மாலை 4-30 மணி வரை நீடித்தது.
 
பேச்சுவார்த்தைக்கு பின்னர்  அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினர். இதைத்தொடர்ந்து வரும் மார்ச் 12 ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நிர்வாக தரப்பில்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திடீரென திமுகவினர் அதிமுகவினர் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் அதிமுகவை  சேர்ந்த எண்ணூர் அர்ஜூனன், நெல்லை பரமசிவம், சண்முகம் , சந்திரமோகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில் எண்ணூர் அர்ஜூனின் நான்கு பற்கள் உடைக்கப்பட்டது. இரண்டு கார்கள் உடைக்கப்பட்டன. அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமியை விரட்டி சென்று  தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அதிமுக தொண்டர்கள் திமுகவினரை தடுத்து நிறுத்தியதால் சின்னசாமி தப்பினார். படுகாயமடைந்த தொண்டர்கள் சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதல் பற்றி  அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான சின்னசாமி கூறியதாவது:

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. பகல் 12-30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 4-30 மணி வரை நடைபெற்றது. தொழிற்சங்கத்தலைவர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதை விரிவாக அதிகாரிகள் கேட்டு 80 சதவீதம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து நாங்கள் வெளியே வந்த போது திமுகவினர் என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அதிமுக தொண்டர்கள் பக்கபலமாக இல்லாவிட்டால் என்னை கொன்றிருப்பார்கள். தொண்டர்கள் உதவியால் உயிரோடு தப்பினேன்.

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. தொழிலாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் அதன் முழு பேரும் புகழும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு போய்ச்சேர்ந்து விடுமே என்ற அரசியல் ஆதாயத்தோடு திமுகவினர் குண்டர்களை அழைத்து வந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் எல்லா தொழிற்சங்கங்களும் அதிகாரிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியோடு வெளிவந்த நிலையில் இந்த , கொலைவெறி தாக்குதலை ஏன் நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறக்கூடாது என்ற திமுகவினரின் எண்ணம் இந்த தாக்குதல் மூலம் வெளிப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்ற சூழ்நிலையில் திமுகவினர் நடத்திய கொலை வெறி தாக்குதல் , தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலையடுத்து , போலீசார் திமுகவினரை விரட்டியடித்து அமைதியை ஏற்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து