முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாறன் சகோதரர்களின் முன் ஜாமீன் மனு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி -  ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். மேலும் இருவரும் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் வரும் மார்ச் 2ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பியிருந்தார். இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மாறன் சகோதரர்கள் இருவரும் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். இவர்களுடன் சன்டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதன் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜரானார். இதனிடையே, முன்ஜாமீன் கோரி மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து