முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

கான்பெரா - உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா தனது பேட்டிங்கின்போது ஆம்லா, டுப்ளெசிஸ் ஆகியோரின் சதங்களால் 411 என்ற இமாலய ரன்களை குவித்திருந்தது. அயர்லாந்தின் தொடக்க வீரர்கள் நடையை கட்டியபோதிலும், மிடில் ஆர்டர் வீரர்கள் சற்று போராட்டம் நடத்தினர். ஆனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

முதல் லீக் போட்டியில், மே.இ.தீவுகள் அடித்த 304 ரன்களை அனாயாசமாக துரத்திச் சென்று பிடித்து வெற்றி வாகை சூடிய அயர்லாந்து, பிற நாட்டு அணிகளை திருப்பிப் பார்க்க செய்தது.விளையாடிய இரு போட்டிகளிலுமே வென்று, தோல்வி பெறாத அணியாக காலரை தூக்கி விட்டிருந்தது அயர்லாந்து.

அதேநேரம், தென் ஆப்பிரிக்கா, தனது முதல் போட்டியில் போராடி ஜிம்பாப்வே அணியை வென்றது. 2வது போட்டியில், 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.

இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், மே.இ.தீவுகளுடன் புயலாக விளையாடிய அந்த அணி, 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அணி தலைவர் டி வில்லியர்ஸ் விளாசி தள்ளி, குறைந்த பந்தில் 150 ரன்கள் தாண்டிய சாதனையை படைத்தார்.

இதனிடையே அயர்லாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள், இந்திய நேரப்படி நேற்று காலை 9 மணிக்கு, கான்பெரா மைதானத்தில் தொடங்கிய, போட்டியில் மோதின.

டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், டி காக் வழக்கம்போல ஏமாற்றினார். இம்முறை 1 ரன்னில் அவர் நடையை கட்டினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா 159 ரன்களும், ஒன்டவுன் பேஸ்ட்மேன், டு பிளெசிஸ் 109 ரன்களும் குவித்தனர்.

அதிரடியாக ஆட தொடங்கிய டி வில்லியர்ஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் டேவிட் மில்லரும், ரிலீ ரோஸ்சவும் அவரது அதிரடியை தங்கள் தோள்களில் தூக்கிப்போட்டு தொடர்ந்தனர். பந்துகள் நாலாபுறமும் சிதறியோட, செய்வதறியாது திகைத்தனர் அயர்லாந்து வீரர்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது. கடந்த போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராகவும், இப்போட்டியிலும் அடுத்தடுத்து நானூறு ரன்களை கடந்து சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்கா. மில்லர் 23 பந்துகளில், 46 ரன்களுடனும், ரோச்சவ் 30 பந்துகளில் 61 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

விரட்டலை தொடர்ந்த அயர்லாந்துக்கு தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. மிடில் ஆர்டரில் ஆன்டி பால்பிர்னே 58 ரன்களும், கெவின் ஓ பிரைன் 48 ரன்களும் எடுத்தது மட்டுமே அந்த அணிக்கு கிடைத்த ஆறுதல். 45வது ஓவரில் அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே தென் ஆப்பிரிக்கா 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அப்பாட் 4 விக்கெட்டுகளையும், மோர்க்கல் 3, ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து