Idhayam Matrimony

மியான்மர் தலைநகரில் இருக்கிறார் ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மியான்மர் தலைநகர் யங்கூனுக்கு அருகில் வனப்பகுதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் விவாதம், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் உள்பட 6 அவசர சட்டங்களுக்கு எதிரான விவாதம் என பல்வேறு பிரச்னைகள் காத்திருக்கும் நிலையில் முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரசின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்துக்கு வரவில்லை. அவர் இரண்டு வார விடுப்பில் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. இதனை பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. காங்கிரசிலும் சில தலைவர்கள் விமர்சித்தனர். அவர் எங்கே சென்றார் என்பதை காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை. தொடர் தோல்விகள் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள சென்றிருக்கிறார் எனவும் விரைவில் திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அவர் உத்தரகாண்டில் இருப்பதாகவும், தாய்லாந்தில் இருப்பதாகவும் யூகங்கள் வெளியாயின. அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என உ.பி.யில் பரபர்பபு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில்  அவர் மியான்மர் தலைநகர் யங்கூனுக்கு அருகே வனப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி தியானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யங்கூனுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்தில் உபான் என்ற இடத்தில் உள்ள பிரபல புத்த ஆசிரமத்தில் தங்கியிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் அவர் புதுடெல்லி திரும்புவார் என்றும் இந்தியா திரும்பியவுடன் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வரும் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க சோனியா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராகுலுக்கு செயல் தலைவர் பதவி கொடுக்கலாம் என சில தலைவர்கள் முன்வைத்த யோசனையை சோனியா நிராகரித்து விட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து