முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அம்மா பேரவை சார்பில் முப்பெரும் தானவிழா

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மதுரை - ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டி மாநில அம்மா பேரவை சார்பில் கோதானம்,ரத்ததானம், அன்னதானம் ஆகிய முப்பெரும் தானவிழா  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று நடக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67- வது பிறந்த தினவிழா கழக அம்மா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில பேரவை செயலாளரும்,வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் முன்நின்று செய்து நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அவர் நீடூழி வாழவேண்டியும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டியும் மும்மத பெரியவர்கள் முன்னிலையில் சர்வ,சமய கூட்டுப்பிரார்த்தனை அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அங்கு கிராமப்புற கலைகளை வளர்க்கும் எண்ணத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கிராம கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா பிறந்த நாளான 24 ம்தேதி அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 10 ஆயிரம் பேர் சாத்தூரிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று அங்கு சிறப்பு வழிபாடும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு 6700 பேருக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் சாத்தூர் தொகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பழங்கள்,ரொட்டி,பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அணிவித்தார். அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு பால்,பழங்கள் அம்மா பேரவை சார்பில் வழங்கப்பட்டது.

சாத்தூர் தொகுதி முழுவதிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை பேரவை சார்பில் நடத்தப்பட்டது. அங்கு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாத்தூர் காளியம்மன் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னைதெரசா அனாதை இல்லத்தில் தங்கி படித்துவரும் மாணவிகளுக்கு பால்,பழங்கள் வழங்கப்பட்டது.

அந்த தொகுதியில் உள்ள 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி தேர்வு எழுதுவதற்கான பேனா,பென்சில்,ரப்பர்,சாமென்றிபாக்ஸ், மற்றும் எழுது பொருள்கள் அடங்கிய ஜெயலலிதா உருவம் பொறித்த பவுச்சுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மேலும் 38 பள்ளிகளுக்கும் ஜெயலலிதா உருவம் பொறித்த நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சங்கரலிங்கபுரம் கிளவிகுளம் ஆகிய பகுதிகளில் 2000 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். ராமலிங்கபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. சாத்தூர் தொகுதி முழுவதும் உள்ள நகர,கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வரவேண்டி சிறப்பு பூஜைகளும்,வழிபாடுகளும் அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக கழக அம்மா பேரவை சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக விரைவில் வரவேண்டியும் அவர் இந்த பூஉலகின் அவதரித்த மகம் நட்சத்திரம் வருவதை முன்னிட்டும் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் முப்பெரும் தான விழா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று 5ம்தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 9.26 மணி வரை நடக்கிறது.

இந்த விழாவில் கோதானம்,ரத்ததானம், அன்னதானம் ஆகிய முப்பெரும் தானங்கள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும்,செய்தித்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி,டி.ராதாகிருஷ்ணன் எம்.பி,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த முப்பெரும் தானவிழாவிற்கான ஏற்பாடுகளை கழக அம்மா பேரவை மாநில,மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து