முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

நெல்சன் - உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் 27-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்லியோட்- கோயட்செர் களமிறங்கினர். 3வது ஓவரிலேயே மெக்லியோட் 11 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கார்டினெர் 19 ரன்களில் அகமது வீசிய பந்தில் அவுட் ஆனார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேச்சன் நிதானமாக கோயட்சருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் 35 ரன்களை எடுத்திருந்தபோது சபீர் ரஹ்மான் பந்தில் மேச்சன் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மோம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினார்.

கோயட்சர் முதல் ஸ்காட்லாந்து வீரராக சதமடித்தார். 45வது ஓவரில் 156 ரன்களுக்கு கோயட்சர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெரிங்டன் 16 பந்துகளில் 26 ரன்களிலும், கிராஸ் 20 ரன்களிலும், ஹக் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது.

வெற்றிக்கு 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சவும்யா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். 2வது  ஓவரில் சர்க்கார் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய மகமதுல்லா, தமிம் இக்பாலுடன் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

வங்கதேச அணி 23.3 ஓவரில் 144 ரன்களை எட்டிய நிலையிம் மகமதுல்லா அவுட் ஆனார். அவர் 62 பந்துகளில் 62 ரன்களைக் குவித்திருந்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய தமிம் இக்பாலுடன் ரஹிம் கை கோர்த்தார். வங்கதேசம் 201 ரன்களை எட்டிய நிலையில் தமிம் இக்பால் அவுட் ஆனார். அவர் 100 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்களை எட்டியிருந்தார். சதமடிக்க இருந்த நிலையில் அவர் அவுட் ஆனாலும் வங்கதேசம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

48.1 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 319 ஐ கடந்து 324 ரன்களை எட்டியது வங்கதேசம் அணி. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வெற்றி கொண்டது வங்கதேசம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து