முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கு 2023 வரை சிறை

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015
Image Unavailable

புது டெல்லி - ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023 வரை சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் தலைவரான இவர் கடைசியாக 1999ம் ஆண்டு முதல் 2005 வரை முதல்வர் பொறுப்பை வகித்தார். அரியானாவில் 1999- 2000ம் ஆண்டு 3206 பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் ஆவணங்களை திருத்தியும், போலி ஆவணங்கள் கொடுத்தும் இளநிலை ஆசிரியர்கள் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் தகுதியற்ற 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
 
இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் மற்றும் 53 பேர் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளில் நேரடியாக தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் டெல்லி சிபிஐ கோர்ட்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட் இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.

ஓம் பிரகாஷ் சவுதாலா ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய சிபிஐ கோர்ட் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அரசு பதவியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளதால் சவுதாலாவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கொடுக்கப்படுவதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.

சவுதாலாவின் மகன் மற்றும் மேலும் 8 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 44 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ஒரு நபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஓம் பிரகாஷ் சவுதாலா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அதில் அவர் தனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அனுமதி பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்து பிரச்சாரம் செய்தார். அவர் விதிகளை மீறியதாக கூறியதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுதாலாவின் அப்பீல் மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்தது. தண்டனை காலத்தில் சவுதாலா ஜெயிலில் நடந்து கொண்ட விதம் பற்றி நீதிபதிகள் கேட்டறிந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர்.
அதில் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 55 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு கருணை காட்ட இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஏமாற்றுதல், மோசடி செய்தல், போலி ஆவணங்களை பயன்படுத்தி சதி செய்தல், அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் சவுதாலா மற்றும் குற்றவாளிகள் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது என்று டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023ம் ஆண்டு வரை ஜெயிலில் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து