முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் முறைகேடு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகைக்கு போலி காசோலை கொடுத்து மோசடி நடந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி அன்று புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. சர்வதேச அளவில் நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் வெளிநாட்டு வீரர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலகளின் சர்வதேச, தேசிய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் இந்திய தடகள வீரர் சோஜிமாத்யூ முதல் பரிசு பெற்றார். கென்ய நாட்டு வீரர் டேவிட்ஜிப்னோவிச் 2-வது பரிசை தட்டிச் சென்றார். தமிழக வீரர் எழில்நிலவன் 3-வது பரிசை வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வீரர்களுக்கான பரிசு தொகை வங்கி காசோலைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் போலி காசோலைகளாக திரும்பி வந்து விட்டன.

மேலும் கென்ய வீரர் தனக்கு கிடைக்க வேண்டிய பரிசு பணம் கிடைக்காததால், சொந்த நாட்டுக்கு போக முடியாமல் சென்னையிலேயே தவித்த நிலையில் உள்ளார். பரிசு பணம் கிடைக்காமல் மோசம் போன வீரர்கள் 3 பேரும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் தாமஸ் மூலம் வளசரவாக்கம் போலீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் கொடுத்தனர்.

ஆனால் வளசரவாக்கம் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்காமல் கென்ய வீரர் உள்ளிட்ட 3 வீரர்களையும் இழுத்தடித்துள்ளனர். பயிற்சியாளர் தாமசையும் போலீசார் மிரட்டலில் ஈடுபட்டார்களாம். இதுவரை வழக்கு எதுவும் போடப்படவில்லை. இதனால் நொந்துபோன பயிற்சியாளர் தாமஸ், நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறையிட்டார்.

கமிஷனர் ஜார்ஜ் தலையீட்டின் பேரில், தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த பிரச்சினையில் போலி காசோலை கொடுத்து மோசம் செய்தவர்களை விட, வளசரவாக்கம் போலீசார் நடந்து கொண்ட விதம்தான் எங்களை நோகடித்தது என்று பயிற்சியாளர் தாமஸ் வேதனையுடன் சொன்னார்.

நமது நாட்டை பற்றியும், நமது போலீசாரை பற்றியும் வெளிமாநிலத்தவரும், வெளிநாட்டவரும் என்ன நினைப்பார்கள், பாதிக்கப்பட்ட கென்ய வீரரை பல தடவை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து இறுதியில் நடவடிக்கை எடுக்காமல், மோசடி புகாரில், மோசம் செய்து விட்டனர் என்று தாமஸ் குறிப்பிட்டார். தற்போது சென்னை போலீஸ் நிலையங்களில் பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் இதுபோன்ற மோசமான நிலையில்தான் உள்ளன. கமிஷனர் ஜார்ஜ் தலையிட்டால்தான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து