முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை - மொரீசியஸ் - செசல்ஸ் நாடுகளுக்கு பிரதமர் பயணம்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு முதல் வெளிநாட்டு பயணமாக செசல்ஸ், மொரீசியஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அவரது சுற்றுப்பயண விவரத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி பிரதமர் மோடி வருகிற 10ம் தேதி டெல்லியில் இருந்து செசல்ஸ் தீவுக்கு புறப்படுகிறார்.
மறுநாள் 11ம் தேதி செசல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலெக்சிஸ்சை சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச்சு நடத்துகிறார். அன்றே மொரீசியஸ் செல்கிறார். 11ம் தேதியும், 12ம் தேதியும் மொரீசியஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

மொரீசியஸ் அதிபர் சர் அனிரூத் ஜெகநாத்துடன் இரு நாட்டு உறவுகள் பற்றி பேச்சு நடத்துகிறார். மொரீசியஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அங்கிருந்து பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். 13ம் தேதியும், 14ம் தேதியும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவை சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகிறார். அந்நாட்டு முக்கிய தலைவர்களையும் சந்திக்கிறார். இலங்கையின் அதிபராக சிறீசேனா பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்து மோடியுடன் பேச்சு நடத்தி சென்றார்.

அதன் பின்பு மோடி இலங்கை செல்வதால் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகள் உறவில் முட்டுக்கட்டையாக இருக்கும் இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் உள்ளிட்டவை பற்றி பேச்சு நடத்துகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும், புத்த மத புனித நகரான அனுராதபுரம், கண்டி ஆகிய நகரங்களுக்கும் மோடி செல்கிறார். இலங்கை பாராளுமன்றத்திலும் உரையாற்றுகிறார்.
 
மோடியின் பயணத்தின் போது இலங்கை தமிழர் பகுதியில் ராணுவ குவிப்பை குறைப்பது, 6,500 ஏக்கர் நிலப்பரப்பு பகுதி உயர்ந்த பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதை மாற்றி சிவில் நிர்வாகத்துக்கு கொண்டு வருவது, 1,100 ஏக்கர் பலாலி உயர் பாதுகாப்பு மண்டலத்தை விடுவித்து அந்த பகுதியில் வசித்த மக்களிடம் நிலத்தை திரும்ப ஒப்படைப்பது, 80 ஆயிரம் நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மீண்டும் குடி அமர்த்துவது, சிறையில் இருக்கும் 1,800 அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, மாயமான 19 ஆயிரம் பேர் நிலை பற்றி அறிவது ஆகியவை பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, வடக்கு பகுதியில் இந்திய தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகிறது. யாழ்ப்பாணத்தில் ரூ. 60 கோடி செலவில் மிகப் பெரிய அளவில் கலாச்சார மையம் கட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி சுற்றுப்பயணத்துக்கு முன் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இலங்கை சென்றார். அங்கு சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடியின் பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இறுதி செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து