முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

பெர்த் - உலகக் கோப்பை லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வெற்றி கொண்டு 8 புள்ளிகளை பெற்ற இந்தியா காலிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஏற்கெனவே பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஆகிய அணிகளை வென்று 6 புள்ளிகளுடன் இருந்த இந்தியாவும். 3-வது இடத்தில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியை நேற்று பெர்த்தில் மோதின. வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மேற்கிந்திய தீவு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சாள் மேற்கிந்திய தீவு பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் மளமளவென சரிந்தன.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் நிலைத்து நின்று அணியை கவுரவமான ஸ்கோருக்கு இழுத்துச் சென்றார். இதேபோல் இந்திய அணிக்கும் நேற்றை போட்டி முக்கியமானதாகவே கருதப்பட்டது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்தியா இந்த போட்டியில் வென்றால் பி பிரிவிலிருந்து கலிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது. எனவே அந்த அணியும் போர் குணத்துடன் களத்தில் இறங்கின.

முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி பெரும் போராட்டம் நடத்தி 39.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எட்டியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் கிறிஸ் கெய்லும் களமிறங்கினர்.தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சும் பீல்டுங்கும் அபாரமாக இருந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களால் ரன்களை எடுக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். 4.5வது ஓவரில் அந்த அணி 8 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்மித்.

அவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதில் ஒரு பவுண்டரி அடக்கம். பின்னர் கெய்லுடன் சாமுவேல்ஸ் கை கோர்த்தார். இந்த இருவரும்தான் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சாதனை படைத்தவர்கள். ஆனால் இந்த ஜோடியை நிலைக்கவிடவில்லை இந்திய வீரர்கள்.
 
7.2வது ஓவரில் சாமுவேல்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது அந்த அணி 15 ரன்களைத்தான் எடுத்தது. அடுத்ததாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் மொகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அப்போது 8.6ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள்.
 
10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 35 ரன்கள் என மிக மோசமான நிலையில் இருந்தது அந்த அணி. பின்னர் ஆடிய சிமன்ஸ் 9 ரன்கள், சமி 26 ரன்கள் ரசல் 8 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழ்ந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியிலேயே ஹோல்டர் ஒருவர்தான் அதிகபட்சமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்திருந்தார்.

அவரால்தான் 182 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை அந்த அணி எடுக்கவும் முடிந்தது.
44.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக ஹோல்டர் வெளியேறினார். 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் பந்து வீசிய முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்க முடியாதபடி பந்துவீசிய கையோடு விக்கெட்டுகளையும் எடுப்பதில் கவனமாக இருந்தனர்.

8 ஓவர்களை வீசிய ஷமி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும்.இதேபோல் உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜாவும் 8.2 ஓவர்கள் வீசி 27 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின், மொகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.இந்திய அணி வெல்ல 183 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். 4.1வது ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. அதேபோல் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மாவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். விறுவிறுவென விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி அரைசதத்தை தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14.6 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
 
அப்போது இந்திய அணி 63 ரன்களையே எடுத்திருந்தது. களத்தில் ரகானேவும் ரெய்னாவும் இருந்தனர். ஆனால் ரகானே இந்திய அணியின் ஸ்கோர் 78 ஆக இருந்த போது அவுட் ஆனார்.ரெய்னாவுடன் டோணி கை கோர்க்க இந்திய அணி ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு 100 ரன்களைத் தாண்டியது. 22.5வது ஓவரில் 107 ரன்களை இந்திய அணி எட்டிய நிலையில் 5வது விக்கெட்டாக ரெய்னா அவுட் ஆனார்.

அவர் 25 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். டோணியுடன் இணைந்த ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.டோணியுடன் அஸ்வின் கை கோர்த்து தொடர்ந்து நிதானமாகவே ரன்களை சேர்த்து 39.1 வது ஓவரில் 185 ரன்களை எட்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து