முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் - உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து. உலக கோப்பையின் 4வது காலிறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்த நியூசிலாந்து 393 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்களில் ஆல் அவுட் ஆனதால், 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில், 24ம்தேதி, செவ்வாய்க்கிழமை, நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை 4வது காலிறுதியில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாசில் வென்று முதலில் பேட் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து 393 ரன்களை குவித்தது. முன்னதாக, முதலில் பேட் செய்த நியூசிலாந்தில், கேப்டன் மெக்கெல்லம் 12 ரன்களிலும், வில்லியம்சன் 33 ரன்களிலும் அவுட் ஆகினர். அரைசதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் 42 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட, அந்த அணியின் தொடக்க வீரர், மார்டின் கப்தில் 152வது பந்தில் பவுண்டரியுடன் 203 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்தது. கப்தில் 163 பந்துகளில், 237 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக கடைசி வரை களத்தில் நின்றார். டேனியல் வெட்டோரியும் 2 பந்துகளில் 8 ரன்கள் விளாசி நாட்-அவுட்டாக நின்றார். இமாலய இலக்கை சேஸ் செய்ய கிளம்பிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், வழக்கமான கரீபியன் ஸ்டைலில் அதிரடி காண்பித்தனர். ஆனால் கெய்ல் தவிர பிற பேட்ஸ்மேன்கள் நிலைக்க முடியவில்லை. டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் முதல் 4 விக்கெட்டுகளும் சாய்ந்தன.

ஆனால் கெய்ல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கினார். அவரது பேட்டில் பட்ட பந்துகளில் பெரும்பாலும் சிக்சர்களாகவே பறந்தன. அனுபவ வீரர் வெட்டோரி வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் எடுத்து அதகளம் செய்தார் கெய்ல். ஆனால் ஆடம் மில்னே வீசிய இன்ஸ்விங்கிங் பந்தில் கிளீன் பௌல்ட் ஆகி 61 ரன்களில் வெளியேறினார் கெய்ல். அப்போதுதான் நியூசிலாந்து அணியினருக்கு பெருமூச்சு வெளியே வந்தது. 33 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல், 8 சிக்சர், 2 பவுண்டரியுடன் 61 ரன்களை குவித்தார்.

கெய்ல் அவுட் ஆனபோது அணியின் ஸ்கோர் 16.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. இதன்பிறகு ஜொனாதன் கார்டர் 32 ரன்கள், டேரன் சம்மி 27 ரன்கள், ஆன்ட்ரே ரசல் 20 ரன்கள் என கணிசமாக ரன் அடித்தனர். இருப்பினும் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. எனவே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தது. இருப்பினும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஒருபக்கம் தீரத்துடன் போராட்டம் நடத்தினார்.

ஆயினும் 26 பந்துகளில் 42 ரன்களை அவர் எடுத்திருந்த நிலையில், வெட்டோரி பந்தில் பவுண்டரி எல்லையில் நின்ற கோரி ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 30.3வது ஓவர்களில் 250 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது. எனவே, நியூசிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
24ம்தேதி நடைபெறும் அரையிறுதியில், நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. நியூசிலாந்து 7வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குள் நுழைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து