முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து - உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து. முன்னதாக, நியூசிலாந்து வெற்றிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை காரணமாக மாற்றப்பட்ட விதிமுறைப்படி இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது நியூசிலாந்து.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நேற்று முதலாவது அரை இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அம்லா, டீ காக் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நியூசிலாந்து அணியின் சவுதி, பவுல்ட் ஆகியோர் தொடக்கம் முதலே நேர்த்தியான பந்து வீச்சை மேற்கொண்டனர்.

3.4வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆம்லா விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 14 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் இருந்த டீ காக்குடன் டூபிளிஸ்சிஸ் இணைந்து கொண்டார். ஆனால் டீ காக்கும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 7.5வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 31 ரன்களை எடுத்த நிலையில் டீ காக் அவுட் ஆனார். அவர் 17 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்தார்.

பின்னர் டுபிளிஸ்சிஸூடன் ரோசவ் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். 25 ஓவர்கள் முடிவில் ஒருவழியாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா. இருப்பினும் 26.1வது ஓவரில் ரோசவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்கா 114 ரன்களை எடுத்தது.

ஆனால் அதன்பிறகுதான் ஆட்டத்தின் போக்கே மாறியது. கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கி, பவுண்டரியும், சிக்சருமாக அடித்து நொறுக்க  ஆரம்பித்தார். பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்த டுப்ளசிசும் பொங்கி எழுந்து அடித்தார். இதனால் 38 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்களை எடுத்தது. ஆனால், மழை ஊற்ற ஆரம்பித்துவிட்டது. எனவே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.. டுபிளசிஸ் 82 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் 60 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி, ஓவர்கள் குறைக்கப்பட்டன. இரு அணிகளுக்குமே, 43 ஓவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா, 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இருப்பினும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, நியூசிலாந்து வெற்றிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மாற்றப்பட்ட விதிமுறைப்படி 3 பவுலர்கள் அதிகபட்சமாக 9 ஓவர்களும், 2 பவுலர்கள் அதிகபட்சமாக 8 ஓவர்களும் வீச முடியும். நியூசிலாந்துக்கு கட்டாய பேட்டிங் பவர் பிளே 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. விருப்ப பேட்டிங் பவர்பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேட் செய்ய வந்த நியூசிலாந்தின் தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடினார். ஸ்டெயின், மோர்க்கல் போன்ற உலகத் தரம் வாய்ந்த பவுலர்களும் அவரது அதிரடி தாக்குதலில் தப்பவில்லை.  இதையடுத்து 6வது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீரை அழைத்தார் கேப்டன் டி வில்லியர்ஸ். அதுதான், போட்டியின் திருப்பமாகவும் அமைந்தது.

அதுவரை அதிரடியாக மட்டை வீசிய நியூசிலாந்து, அந்த ஓவரை மெய்டனாக விட்டுக் கொடுத்தது. கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கப்தில்தான், அந்த ஆறு பந்துகளையும் சந்தித்தார். 7வது ஓவரை வீச வந்தார், மோர்க்கல். முதல் பந்திலேயே அடித்து ஆட முயன்ற பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 6.1வது ஓவரில் 71 ரன்கள் குவித்த நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை அப்போது பறிகொடுத்தது.இதையடுத்து தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆதிக்கம் ஆரம்பித்தது.

8.5வது ஓவரில் மோர்கல் பந்தில் கேன் வில்லியம்சன் கிளீன் பௌல்ட் ஆகி வெளியேறினார். எனவே கப்திலும், டைலரும் பொறுமையாக ஆட தொடங்கினர். ஆனாலும் ரன் ரேட்டை குறையவிடவில்லை. ரோஸ் டைலர் 30 ரன்னிலும், கப்தில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், கிரான்ட் எலியட் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து அணியை மீட்டது.

கடைசிகட்டத்தில் 58 ரன்களில் ஆன்டர்சன் அவுட் ஆன நிலையில், அதை தொடர்ந்து களமிறங்கிய லூக் ரோன்ச்சியும் 8 ரன்களில் நடையை கட்டினார். மறுமுனையில் எலியட் நிலைத்து நின்று ஆடினார். கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 12 ரன்கள் தேவை, இறுதி போட்டிக்குள் செல்ல 11 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது.கடைசி ஓவரை ஸ்டெய்ன் வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்தில் எலியட் சிக்சர் அடித்து வெற்றியை தட்டிப் பறித்தார்.

7வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குள் வந்த நியூசிலாந்து முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பை சோகம் தொடருகிறது. நெருக்கடியான நேரத்தில் ஆட வந்து 84 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்ற நியூசிலாந்தின் எலியட்டுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து