முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க ரூ.1,100 கோடி

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தின் முன்னோடி திட்டமான  மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டத்திற்காக இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 21.65 லட்சம் மாணவ-மாணவியர்  பயனடைந்துள்ளனர். 2015-2016-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் இந்த முன்னோடி திட்டத்திற்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆதி திராவிடர் நலனுக்கு ரூ11,274 கோடி, ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு ரூ.11,274.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2015-2016-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். இது போன்றே, பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.657.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும்.

மத்திய அரசு தனது பங்கான ரூ. 982.31 கோடியை முழுமையாக அளிக்காத சூழ்நிலையிலும், உயர்கல்வி உதவி திட்டத்தின் கீழ், இந்த அரசு 2014-2015-ம் ஆண்டில் ரூ. 669.64 கோடி வழங்கியது. இந்த முயற்சிகளை தொடர்ந்திட 2015-2016-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில், பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி உதவி தொகை திட்டங்களுக்கு முறையே ரூ. 56.37 கோடியும், ரூ.674.98 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மாணவ-மாணவியரின் நலனை மட்டுமே தொடர்ந்து கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 சீருடை தொகுப்புகள், புத்தகப் பைகள், காலணிகள், வடிவியல் பெட்டிகள், வரை படப்புத்தககங்கள், க்ரேயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் போன்றவற்றை வழங்குவதற்காக, 2015-2016-ம் ஆண்டிற்கு 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சைக்கிள்களுக்கு ரூ.219 கோடியும், 6.62 லட்சம் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்குவதற்காக 219.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக 2011-2012-ம் ஆண்டில் 90.28 சதவிதமாக இருந்த உயர்நிலைக்கல்வி மொத்த சேர்க்கை விகிதம், 2013-2014 -ம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைக்கல்வி மொத்த சேர்க்கை விகிதமும், 2013-2014-ம் ஆண்டில் 75.87 சதவிதமாக உயர்ந்துள்ளது.

இது தேசிய சராசரி அளவான 52.21 சதவீதத்தை விட கணிசமான அளவு அதிகமாகும்.பள்ளிக் கல்விக்கு ரூ20,936 கோடி2015-2016-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு 2,090.09 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக்கல்வி இயக்கத்திற்கு 816.19 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-2015-ம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 153.55 கோடி ரூபாய் அளவிற்கு கணிசமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2015-2016-ம் ஆண்டிற்கு இப்பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவியாக 110.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது போன்றே, 2015-2016-ம் ஆண்டிற்கு மாநிலத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக 868.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015-2016-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உயர்கல்வித்துறைக்கு 3,696.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து