முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசியை கட்டுப்படுத்த அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்திட அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட் உரையின் போது ஓ. பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2011ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசியை அதிமுக அரசு வழங்கி வருகிறது.

அதனுடன், சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்யும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.பருப்பு வகைகளின் சந்தை விலை உயர்ந்துள்ளதால் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்கான செலவும் பெருமளவு உயர்ந்துள்ளது. இத்தகைய நிதிச்சுமைக்கு இடையிலும் அனைவருக்கும் பயன் அளிக்கக் கூடிய பொது விநியோகத் திட்டத்தை நமது மாநிலம் தொடர்ந்து செயல்படுத்தும்.வரும் நிதியாண்டில் உணவு மானியத்திற்கு ரூ.5 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு பல புதுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. சந்தை அளவில், குறிப்பிட்ட விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு மாநில விலை கட்டுப்பாட்டு நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்நிதியம் திறன்பட செயல்படுவதற்காக அதற்கான நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு மிகவும் இன்றியமையாத பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியன மிகக் குறைந்த விலையில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதால் ஆண்டுதோறும் ரூ.1, 230 கோடி மானியச் சுமை ஏற்படுகிறது.

கூடுதலாக, பண்ணைப் பசுமைக் கடைகளைக் கூட்டுறவு அமைப்புகள் தொடங்கி குறைந்த விலையில் காய்கறிகளை விற்று வருவதோடு, அம்மா மருந்தகங்கள் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அமுதம் கூட்டுறவு அங்காடிகளை விரிவாக்கத் தேவையான நடவடிக்கைகளை 20 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது.அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற திட்டங்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்திட இந்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து